ADDED : டிச 23, 2025 07:45 AM

வால்பாறை: வால்பாறையில், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இடங்களில் யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் தனித்தனி கூட்டமாக யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் இரவு நேரத்தில் தொழிலாளர்களின் வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்துகின்றன. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைவதோடு, தொழிலாளர்களும் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியில் வரும் யானைகள் சாலையில் வரும் வாகனங்களை வழி மறிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை எஸ்டேட் பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், தொழிலாளர்கள் மிகவும் கவனமாக பணிக்கு செல்ல வேண்டும்.
குறிப்பாக, காலை நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்குச்செல்லும் போது, யானைகள் நடமாட்டம் உள்ளதா என கண்டறிந்த பின் தேயிலை பறிப்பை துவங்க வேண்டும். மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

