/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமூர்த்தியில் வண்டல் மண் துார்வாருவதால்... ஆழமாகும் அணை! விளைநிலங்களை வளமாக்க விவசாயிகள் ஆர்வம்
/
திருமூர்த்தியில் வண்டல் மண் துார்வாருவதால்... ஆழமாகும் அணை! விளைநிலங்களை வளமாக்க விவசாயிகள் ஆர்வம்
திருமூர்த்தியில் வண்டல் மண் துார்வாருவதால்... ஆழமாகும் அணை! விளைநிலங்களை வளமாக்க விவசாயிகள் ஆர்வம்
திருமூர்த்தியில் வண்டல் மண் துார்வாருவதால்... ஆழமாகும் அணை! விளைநிலங்களை வளமாக்க விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 13, 2024 07:56 AM

உடுமலை : நீர் நிலைகளில் கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும், விளை நிலங்களை வளமாக்கும் வகையிலும், உடுமலை திருமூர்த்தி அணை மற்றும் குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் பணி நேற்று துவங்கியது.
அணை, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளை துார்வாரி, பருவ மழை நீரை சேமிக்கும் வகையிலும், விளை நிலங்களை வளமாக்கும் வகையில், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டு இத்திட்டம் எளிமைப்படுத்தப்பட்டு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, நன்செய் நிலமாக இருந்தால், 75 கன மீட்டரும், புன்செய் நிலமாக இருந்தால், 90 கன மீட்டரும், மண்பாண்டம் செய்வோர், 60 கன மீட்டரும் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசிதழில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர் நிலைகள் மற்றும் எடுக்க அனுமதிக்கப்பட்ட மண் அளவு வெளியிடப்பட்டது.
நீர் வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, திருமூர்த்தி அணையில், 4 சர்வே எண்களில், ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கன மீட்டரும், பெரிய குளத்தில், 30 ஆயிரம், கரிசல் குளத்தில், 15 ஆயிரம், தினை குளத்தில், 15 ஆயிரம் கன மீட்டரும் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதே போல், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, குடிமங்கலம் ஒன்றியத்தில், குடிமங்கலம், ஆமந்தகடவு. ஆத்துக்கிணத்துப்பட்டி, கொங்கல் நகரம், பண்ணைக்கிணறு, சோமவாரபட்டி, வீதம்பட்டி, விருகல்பட்டி குளங்கள்.
உடுமலை ஒன்றியத்தில், ஆண்டியகவுண்டனுார், பூலாங்கிணர், பெரியவாளவாடி, மடத்துக்குளம் ஒன்றியத்தில், மெட்ராத்தி, பணத்தம்பட்டி ஈசரவள்ளி குளம், வேடபட்டி குளங்களில் மண் எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஒன்றியத்திலும், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், தாலுகா அலுவலகம் வாயிலாக, அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, நீர் நிலைகள் வாரியாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களிடம் அனுமதி உத்தரவை வழங்கி, விவசாயிகள் ஒதுக்கப்பட்ட மண் எடுத்து வருகின்றனர்.
நேற்று, திருமூர்த்தி அணையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வே எண்களில், மண் எடுக்கும் பணி துவங்கியது.
அதிகாரிகள் கூறுகையில், 'நீர் நிலைகளில் மண் எடுக்க, இ - சேவை மையங்களில், https://tnesevai.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். தற்போது அனுமதி பெற்று விவசாயிகள் திருமூர்த்தி அணை மற்றும் ஒரு சில குளங்களில் மண் எடுத்து வருகின்றனர். எடுக்கப்படும் மண், அனுமதி பெற்ற விவசாய நிலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்,' என்றனர்.

