/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி உதவித்தொகை தருவதாக வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்! விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகங்கள்
/
கல்வி உதவித்தொகை தருவதாக வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்! விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகங்கள்
கல்வி உதவித்தொகை தருவதாக வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்! விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகங்கள்
கல்வி உதவித்தொகை தருவதாக வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்! விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகங்கள்
ADDED : செப் 19, 2025 08:20 PM

பொள்ளாச்சி; 'கல்வி உதவித்தொகை தருவதாக வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்,' என,பெற்றோரின் 'வாட்ஸ்ஆப்' எண்களுக்கு தகவல்களை அனுப்பி, பள்ளி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், உயர்கல்வி பயில கல்வி கடன், கல்வி உதவித்தொகை பெற்று படிக்கின்றனர். ஒரு சிலர் மனமுவந்து கல்வி உதவித்தொகை அளிக்கின்றனர்.
இந்நிலையில், பெற்றோரின் 'வாட்ஸ் ஆப்' எண்களுக்கு, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்படைய கல்வி உதவி தொகை பெற, கீழே உள்ள 'லிங்க்'யில் விண்ணப்பிக்கவும் என, தகவல்கள் வருகின்றன.
இந்த தகவல்களை உண்மையென நம்பி, சிலர் தங்களது முழு தகவல்களை பதிவிடுவதுடன், முன்பணம் செலுத்தி ஏமாறுகின்றனர். சிலர் வங்கி கணக்கு எண் பதிவிடும் போது, மொபைல்போனுக்கு வரும் 'ஓடிபி'யை உள்ளிடுகையில், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை இழக்க நேரிடுகிறது. இது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு சில பள்ளி நிர்வாகங்கள் வாயிலாக, பெற்றோர் 'வாட்ஸ்ஆப்' எண்களுக்கு தகவல்களை அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த தகவலில் கூறியிருப்பதாவது:
அரசு கல்வி உதவித்தொகை துறையில் இருந்து பேசுவதாகவோ அல்லது கல்வித்துறையில் இருந்து பேசுவதாகவோ அல்லது கல்வி உதவித்தொகை தருவதாகவோ கூறி, போன் வாயிலாக யார் பேசினாலும் அதை நம்ப வேண்டாம். அருகில் உள் போலீஸ் ஸ்டேஷனில் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
அடையாளம் தெரியா நபர்கள், உங்களுக்கு போன் செய்து உங்களை பற்றிய தகவல்களையும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை தெரிவித்தால் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.
'வாட்ஸ் ஆப்' வாயிலாகவும், பிற சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசு கல்வித்துறை என்ற 'லோகோ' வைத்து வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம்.
போன் செய்து, உங்கள் வீட்டில் உள்ளவர்களின் போன் நம்பரை கேட்டால் கொடுக்க வேண்டாம்.அரசு கல்வி உதவித்தொகைக்கு பதிவு செய்ய, 'ஆன்லைனில்' வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். இது தொடர்பான, எந்த அப்ளிகேஷனையும் 'டவுன்லோடு' செய்ய வேண்டாம்.
மேலும், வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி இருப்புத்தொகை பற்றிய விபரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.ஜி பே, போன் பே, பேடிஎம், யுபிஐ ஐடி விபரங்களை போனில் பேசும் நபர்களிடம் தெரிவிக்க வேண்டாம். அடையாளம் தெரியாத நபர்களால் அனுப்பப்படும், 'க்யூ ஆர் கோடு'யை ஸ்கேன் செய்ய வேண்டாம்.'க்யூஆர் கோடு'யை ஸ்கேன் செய்து மற்றவர்களுக்கு பணம் அனுப்ப மட்டுமே முடியம். ஒரு போதும் பணத்தை பெற முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஏதேனும் இணையவழி மோசடி குற்றத்தில் பாதிக்கப்பட்டாலோ அல்லது அது தொடர்பாக சந்தேகம் எழுந்தாலோ உடனடியாக, '1930' என்ற சைபர் கிரைம் ெஹல்ப் லைன் எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ளவும். அல்லது, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர்கல்வியில் கல்வி உதவித்தொகைக்கு கல்லுாரிகளிலேயே விண்ணப்பம் பெற்று பதிவு செய்யப்படுகிறது. அதனால், ஏமாற்று நபர்களிட் இருந்து பாதுகாப்பாக இருக்க, மாணவர்கள் மற்றும் பெற்றோர் இந்த அறிவுரைகளை பின்பற்றி விழிப்புணர்வுடன் இருக்கவும் பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.