/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுரங்க பாலத்தில் குழி தோண்டி பல மாசமாச்சு! வழித்தடம் மறிக்கப்பட்டதால் மக்கள் பாதிப்பு எதையும் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
/
சுரங்க பாலத்தில் குழி தோண்டி பல மாசமாச்சு! வழித்தடம் மறிக்கப்பட்டதால் மக்கள் பாதிப்பு எதையும் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
சுரங்க பாலத்தில் குழி தோண்டி பல மாசமாச்சு! வழித்தடம் மறிக்கப்பட்டதால் மக்கள் பாதிப்பு எதையும் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
சுரங்க பாலத்தில் குழி தோண்டி பல மாசமாச்சு! வழித்தடம் மறிக்கப்பட்டதால் மக்கள் பாதிப்பு எதையும் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ADDED : பிப் 14, 2024 11:09 PM

உடுமலை பழனியாண்டவர் நகர் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதி மக்கள், பிரதான வழித்தடம் அடைப்பு, வாடகைக்கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை, குண்டும், குழியுமான ரோடு, மழை நீர் வடிகால் வசதி இல்லாதது, பூங்கா, மைதானம் என எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு குடியிருப்பாக உள்ளது, என குடியிருப்போர் புலம்புகின்றனர்.
உடுமலை நகராட்சி மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சியிலுள்ள, பழனியாண்டவர் நகர், ஜீவா நகர், காந்திபுரம், விஜயகிரி நகர், பி.எம்.சி., நகர், குபேரன் நகர், அருள்ஜோதி நகர், லட்சுமி நகர், கண்ணமநாயக்கனுார் பகுதிகளில் வசிக்கும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, நகரை இணைக்கும் பிரதான வழித்தடமாக பெரியார் நகர் ரயில்வே சுரங்க வழித்தடம் உள்ளது.
பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். கொழுமம் ரோடு, ராமசாமி நகர் ரயில்வே கேட் மூடப்படும் போது, ஆம்புலன்ஸ்கள் உட்பட, அதிகளவு வாகனங்கள் இந்த பாதையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றன.
நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு இருந்தாலும், இப்பகுதியிலுள்ள வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், இரு புறமும் உள்ள மழை நீர் வடிகால்களில் கலந்து, முறையான கட்டமைப்பு வசதியில்லாததால், ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்குகிறது.
இதனால், கழிவு நீரை கடந்து வரும் அவல நிலையும், மழை காலங்களில் தேங்கும் மழை நீரில் மிதந்து வரும் அவல நிலை இருந்தது.
பிரதான வழித்தடமாக உள்ளதால், சிரமங்களுடன் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், நகராட்சி சார்பில், பெரியார் நகர் பகுதியில் தோண்டப்பட்ட குழி காரணமாக, முற்றிலும் வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது.
உயிர்ப்பலி வாங்கும் குழியை மூடவும், மழை நீர் வடிகால்களை முறையாக இணைக்கவும், பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும் வேண்டும். மழை காலங்களில் கழிவு நீர் தேங்கும் போது, மின் மோட்டார்கள், உறிஞ்சு குழி அமைத்து, முறையாக அகற்ற வேண்டும்.
பூங்கா இல்லை
பழனியாண்டவர் நகர், கடந்த, 1969ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், சிறுவர்கள் விளையாடவும், நடை பயிற்சி மேற்கொள்ளவும் மைதானம் இல்லை.
மேலும், பொதுமக்களுக்கு பயன் அளிக்கும், பொழுது போக்கு அம்சமான பூங்கா வசதியும் இல்லாத நகராக உள்ளது. இங்கு, 4 இடங்களில் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், புதர் மண்டி காணப்படுவதோடு, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து வருகிறது.
எனவே, இந்த நிலங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.
சிதிலமடைந்த திருமண மண்டபம்
பழனியாண்டவர் நகர் உருவாக்கப்பட்ட போது, அமைக்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் செயல்படாமல் முடங்கியுள்ளது. இதன் சார்பில், விநாயகர் கோவில் எதிரே, பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபம் முறையாக பயன்படுத்தாமலும், பராமரிக்காமலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. வளாகம் முழுவதும் செடி, கொடிகள் முளைத்து, புதர் மண்டி, சமூக விரோத செயல்கள் நடக்கும் ஆபத்தான மையமாக மாறியுள்ளது.
சொந்த கட்டடம் இல்லை
பழனியாண்டவர் நகரில், 400க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைக்கு, சொந்த கட்டடம் இல்லாததால், தனியார் கட்டடத்தில் பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வருகிறது.
இதற்கான வாடகையை கூட்டுறவு சங்கம், குடிமைப்பொருள் துறை வழங்காத நிலையில், பொதுமக்களிடமிருந்து, மாதம் தோறும் ரேஷன் கடை வாடகைக்கு என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. ரேஷன் பொருட்களும் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை உள்ளது.
இந்நகரில், அரசுக்கு சொந்தமான நிலங்கள் அதிகளவு உள்ளதால், நிரந்தர கட்டடடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
சுகாதாரமில்லாத சுற்றுச்சாலை
உடுமலை நகரில், தளி ரோட்டையும், கொழுமம் ரோடு, பழநி ரோட்டை இணைக்கும் வகையில், பழனியாண்டவர் நகர் வழியாக, சுற்றுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ரோட்டின் இரு புறமும் குப்பை கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. அபாயகரமான கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுகிறது.
அவற்றுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால், குடியிருப்பு பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி , பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நகர பகுதி மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சி எல்லையில், குப்பை, கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், குப்பை மலையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்குள்ள, சுகாதார வளாகம் முறையாக பராமரிக்காமல், பயன்படுத்த முடியாமல், சிதிலமடைந்தும், துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.
ரோடுகள், காலி இடங்கள் திறந்த வெளி கழிப்பிடமாக மாற்றப்படுவதை தடுக்க, நகராட்சி கழிப்பிடத்தை புதுப்பிக்க வேண்டும்.
பழனியாண்டவர் நகரிலுள்ள ரோடுகள் பராமரிப்பின்றி, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனை புதுப்பிக்க வேண்டும். இப்பகுதியில், மழை நீர் வடிகால் வசதி இல்லாததால், மழை காலங்களில் வெள்ள நீர் ரோடுகளில் ஓடி வருகிறது. முறையாக மழை நீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
இவ்வசதிகளை நகராட்சியினர் செய்து தர வேண்டும் என, இக்குடியிருப்புவாசிகள் எதிர்பார்ககின்றனர்.

