/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளிர் காலத்திலும் மகசூல் அள்ளித்தரும் 'மார்கழி மல்லிகை' சாகுபடி செய்தால் ஆண்டு முழுதும் வருவாய்
/
குளிர் காலத்திலும் மகசூல் அள்ளித்தரும் 'மார்கழி மல்லிகை' சாகுபடி செய்தால் ஆண்டு முழுதும் வருவாய்
குளிர் காலத்திலும் மகசூல் அள்ளித்தரும் 'மார்கழி மல்லிகை' சாகுபடி செய்தால் ஆண்டு முழுதும் வருவாய்
குளிர் காலத்திலும் மகசூல் அள்ளித்தரும் 'மார்கழி மல்லிகை' சாகுபடி செய்தால் ஆண்டு முழுதும் வருவாய்
ADDED : டிச 28, 2025 04:07 AM

கோவை: குளிர் காலங்களில், மற்ற ரக மல்லிகைகளின் மகசூல் குறையும் நிலையில், அதிக மகசூல் தரும், மார்கழி மல்லிகையை சேர்த்து சாகுபடி செய்து, விவசாயிகள் பயன் பெறலாம் என, வேளாண் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.
குண்டு மல்லி, ஜாதி மல்லி, முல்லை ஆகிய மல்லிகை ரகங்கள் வர்த்தக ரீதியாக அதிகம் பயிரிடப்படுகின்றன. இவை, பொதுவாக, மார்ச் முதல் செப்., வரையிலான காலகட்டங்களில் தான் அதிக மகசூல் தரும்.
இதனால் வரத்து குறைந்த மற்ற காலங்களில் இவற்றின் விலை அதிகமாக இருக்கும். எனவே, ஆண்டு முழுதும் பூக்கும். குறிப்பாக, குளிர் காலங்களில் அதிக மகசூல் தரும், 'கோ 1 ' மார்கழி மல்லிகையை பயிரிட்டு விவசாயிகள் பயன்பெறலாம் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, மலரியல் மற்றும் நிலம் எழிலுாட்டும் துறை தலைவர் கங்கா கூறியதாவது:
குண்டு மல்லி, ஜாதி மல்லி, முல்லை ஆகியவை கோடை தவிர, மற்ற காலங்களில் குறைவாக பூக்கும் என்பதால், குளிர்காலங்களில் கிடைப்பதில்லை.
பொங்கல் பண்டிகை சமயங்களில், குண்டு மல்லி கிலோ, 7,500 ரூபாய் வரை விற்பனையாகும் நிலை உள்ளது. எனவே, கோ 1 மார்கழி மல்லிகை என்ற ரகத்தை தேர்வு செய்து, 2023ல் அறிமுகம் செய்தோம்.
இந்த கோ 1 மார்கழி மல்லிகை, இந்தியாவை பூர்விகமாக கொண்டது. ஆண்டு முழுதும் பூக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, நவ., முதல் பிப்., வரையிலான காலகட்டங்களில் அதிகம் பூக்கும்.
விவசாயிகள், வழக்கமான மல்லிகை ரகங்களுடன் மார்கழி மல்லிகையையும் சேர்த்து சாகுபடி செய்தால், மற்றவற்றின் வரத்து குறையும். குளிர் காலத்தில், மார்கழி மல்லிகையால் வருவாய் ஈட்ட முடியும். இந்த ரகம் கிலோ, 1,500 வரை விலை போகும். பருவமல்லா காலங்களிலும் பூக்கும் என்பதால் ஆண்டு முழுதும் வருவாய் கிடைக்கும்.
மொட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மலர்ந்த பின் துாய வெண்மை நிறத்தில் இருக்கும். இந்த வண்ண சேர்க்கையால், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மிதமான வாசனை கொண்டது. அடர் வாசனை பிடிக்காதவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.
வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுவதால், ஏற்றுமதி வாய்ப்புகளும் உண்டு. இதன் மொட்டு, மற்ற ரகங்களை விட கூடுதல் காலங்களுக்கு வைத்து பயன்படுத்த முடியும். வீடு, கோவில்களில் வளர்ப்பதுடன், பொது பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கலாம்.
ஹெக்டருக்கு, 3,300 செடிகள் நடலாம். பூச்சி, நோய் தாக்குதல்கள் பெரிய அளவில் இல்லை. கட்டுப்படுத்தக்கூடிய அளவிலான இலைப்புள்ளி நோய் தாக்குதல் மட்டும் உள்ளது. குறைவான நீர் போதும். ஹெக்டருக்கு, 9.5 டன் ஆண்டு மகசூல் எடுக்கலாம்.
கோபி, ஈரோடு, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நான்கு ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, 6 ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்ய நாற்றுகள் தயாராக உள்ளன. நடப்பாண்டு விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

