/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலை, கோட்டூரில் நெல் சாகுபடிக்கு செலவு உயருது; விலை உயரல! அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விவசாயிகள்
/
ஆனைமலை, கோட்டூரில் நெல் சாகுபடிக்கு செலவு உயருது; விலை உயரல! அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விவசாயிகள்
ஆனைமலை, கோட்டூரில் நெல் சாகுபடிக்கு செலவு உயருது; விலை உயரல! அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விவசாயிகள்
ஆனைமலை, கோட்டூரில் நெல் சாகுபடிக்கு செலவு உயருது; விலை உயரல! அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விவசாயிகள்
ADDED : ஏப் 04, 2025 11:25 PM

பொள்ளாச்சி; ஆனைமலை, கோட்டூர் பகுதியில் நெல் கொள்முதல் மையம் நேற்று துவங்கப்பட்டது. விலை உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆழியாறு அணை வாயிலாக, புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஆனைமலை, கோட்டூர் சுற்றுப்பகுதிகள் பாசனம் பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இரு பருவங்களாக நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால், இரு பருவத்திலும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த நவ., மாதம் சாகுபடி செய்யப்பட்ட நெல், தற்போது அறுவடைக்கு தயராகி வருகிறது. அதில், பழைய ஆயக்கட்டு கால்வாய் பகுதிகளில் அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பழனிக்குமார், தரக்கட்டுப்பாடு மேலாளர் வனிதாமணி, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன், விவசாயி பட்டீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கோட்டூர் மலையாண்டிப்பட்டிணத்தில் அரசு நெல் கொள்முதல் மையம் துவங்கப்பட்டது. இதில், அதிகாரிகள், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் மணிகண்டன், துணை தலைவர் வெள்ளிங்கிரி, செயலர் கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் கொள்முதல் மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. சன்னரகம் ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ), 2,450 ரூபாய்; பொது ரகம் ஒரு குவிண்டால், 2,405 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை, 9:30 மணி முதல், மதியம், 1:30 மணி வரையும், மதியம், 2:30 மணி முதல் மாலை, 6:30 மணி வரையும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல்லில் 17 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். விவசாயிகள் நெல்லை கொள்முதல் மையத்துக்கு கொண்டு வந்து பயன்பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்பார்ப்பு
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் மணிகண்டன் கூறியதாவது:
அறுவடை துவங்கும் நேரத்தில் நெல் கொள்முதல் மையம் துவங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம், சன்னரகம் குவிண்டாலுக்கு, 2,450 ரூபாய், பொது ரகம், 2,405 ரூபாயாக கடந்தாண்டு விலையே நீடிக்கிறது.
இந்தாண்டு, நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சாகுபடி முதல் அறுவடை வரை செலவு அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப நெல் விலையை உயர்த்தி கொடுத்தால் மட்டுமே பயன் பெற முடியும்.
குவிண்டாலுக்கு, குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளுக்கு பலனளிக்கும்.
இவ்வாறு, கூறினார்.

