/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மாற்றத்துக்கேற்ப தொடர்கற்றல் அவசியம்'
/
'மாற்றத்துக்கேற்ப தொடர்கற்றல் அவசியம்'
ADDED : டிச 01, 2024 01:16 AM

கோவை: குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின் 36வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லுாரி அரங்கில் நடைபெற்றது. காலை அமர்வில், கென்னமெட்டல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயகிருஷ்ணன் வெங்கடேசன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
மாணவர்களே நாட்டின் எதிர்காலம். பட்டம் பெறுவது வாழ்வின் துவக்கம் என்பதை உணரவேண்டும். சினிமாவில் பார்ப்பது போன்று வாழ்க்கை இருக்காது; சவால்கள் நிறைந்த உலகில் தோல்வியை ஏற்காத தொடர் செயல்பாடுகளே நிலையான வெற்றியை கொடுக்கும்.
நீங்கள் இப்போது படிப்பது, அடுத்த ஐந்தாண்டுகளில் பயன்படாது. மாற்றங்கள், வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும். துறை எதுவாயினும், 'அப்டேட்' செய்துகொள்ள வேண்டும். மேலும், இயற்கையுடன் இணைந்து சமூக பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டியது அவசியம்.
வெற்றிக்கு குறுக்குவழிகள் என்பது இல்லை என்பதை நினைவில் கொண்டு, இலக்கை நோக்கி பயணப்படுங்கள். கருத்துக்களை வெளிப்படுத்தும் தைரிய மனப்பான்மையையும், திறன்களையும் மேம்படுத்திக்கொள்ளவேண்டும். இறுதியாக, மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டியது அவசியம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, மதியம் மற்றும் மாலை அமர்வுகளில் ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் தலைவர் கிஷோர் ஜெயராமன், அரவிந்த் கண் மருத்துவ மையத்தின் திட்ட இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நேற்றைய நிகழ்வில், 1505 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
இதில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர், கல்லுாரி முதல்வர் எழிலரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

