/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுங்கம் சந்திப்பில் ஜாக்கிரதையாக நடக்கிறது குழாய் பதிக்கும் பணி இரவு முழுவதும் மாநகராட்சி கமிஷனர் முகாம்

ADDED : டிச 24, 2025 05:11 AM

கோவை: கோவை மாநகராட்சி 60வது வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் பதித்தல், தொட்டிகள் கட்டுதல், வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. திருச்சி ரோட்டில் சிவராம் நகர், வள்ளியம்மாள் லே-அவுட், புலியகுளம், லட்சுமி மில்ஸ் காலனி மற்றும் நஞ்சுண்டாபுரம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்ல, சுங்கம் சந்திப்பு பகுதியில் விடுபட்ட, 350 மீட்டர் துாரத்துக்கு பிரதான குழாய் பதிக்கும் பணி, நேற்று முன்தினம் இரவு துவங்கியது.
குழாய் பதிக்க வேண்டிய இடங்களில், பவர் டிரில்லரால் துளையிட்டு, பொக்லைன் இயந்திரங்களால் தோண்டி, இரவோடு இரவாக குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நேற்று அதிகாலை 7 மணி வரை நடந்தது. மீண்டும் காலை 10 மணிக்கு துவக்கப்பட்டு, வாகன போக்குவரத்து பாதிக்காத அளவுக்கு, இரவு வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து போலீசார், வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.
இந்த பணியால் திருச்சி ரோடு, நிர்மலா கல்லுாரி ரோட்டில் வந்தவர்கள் சற்று துாரம் தள்ளிச் சென்று, ஒலம்பஸ் பகுதியில், 'யூ டேர்ன்' அடித்து திரும்பிச் சென்றனர்.
வாலாங்குளத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், சிங்காநல்லுார் குளம் சென்றடைய, திருச்சி ரோட்டில் கான்கிரீட் பாக்ஸ் வடிவிலான வடிகால் ரோட்டுக்கு கீழ் பதிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வடிகால் சுங்கம் சந்திப்பை கடந்தே செல்கிறது. குடிநீர் குழாய் பதிக்க பொக்லைன் வாகனங்களால் ரோட்டை தோண்டும்போது, கான்கிரீட் பாக்ஸ் உடைந்து விடக்கூடாது என்பதில், மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள், கவனமாக செயல்பட்டனர்.
கமிஷனர் சிவகுரு பிரபாகரன், இரவு முழுவதும் முகாமிட்டு, பணிகளை கண்காணித்தார். தலைமை பொறியாளர் விஜயகுமார்உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.