/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுாரில் 'போர்வெல்' தண்ணீர் மஞ்சளா இருக்கு! மக்களுக்கு ஆய்வறிக்கை தந்த அதிர்ச்சி
/
வெள்ளலுாரில் 'போர்வெல்' தண்ணீர் மஞ்சளா இருக்கு! மக்களுக்கு ஆய்வறிக்கை தந்த அதிர்ச்சி
வெள்ளலுாரில் 'போர்வெல்' தண்ணீர் மஞ்சளா இருக்கு! மக்களுக்கு ஆய்வறிக்கை தந்த அதிர்ச்சி
வெள்ளலுாரில் 'போர்வெல்' தண்ணீர் மஞ்சளா இருக்கு! மக்களுக்கு ஆய்வறிக்கை தந்த அதிர்ச்சி
ADDED : நவ 05, 2024 06:10 AM

கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கு அருகே உள்ள பகுதிகளில், பயன்படுத்த முடியாத அளவுக்கு மஞ்சள் நிறத்தில் 'போர்வெல்' தண்ணீர் வருகிறது. ஆய்வறிக்கையில் கூறிய தகவல்களால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக வெள்ளலுாரில் கழிவுநீர் பண்ணை உள்ளது. மாநகர பகுதிகளில் தினமும் சேகரமாகும் குப்பையை இங்கு பல ஆண்டுகளாக குவிக்கப்படுவதால், மலை போல் தேங்கி வருகிறது. துர்நாற்றம், ஈ தொல்லை போன்ற சுகாதார சீர்கேடு பிரச்னைகளை, சுற்றுப்பகுதி மக்கள் சந்திக்கின்றனர். இப்பிரச்னை, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வரை சென்று விசாரணையும் நடந்து வருகிறது. இக்குப்பை கிடங்கால், சுற்றுப்பகுதிகளில் வசிக்க முடியாத சூழல் உள்ளதாக, குடியிருப்பு வாசிகள் குமுறுகின்றனர்.
இச்சூழலில், மாநகராட்சி, 99வது வார்டு ஸ்ரீராம் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் போர்வெல் தண்ணீர் மஞ்சள் நிறமாக வந்தது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தண்ணீர் மாதிரியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். ஆய்வறிக்கை விபரங்களை, குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டார். அவருக்கு வழங்கிய ஆய்வறிக்கையில், தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் அளவு (டி.டி.எஸ்.,) ஒரு லிட்டருக்கு, 3,182 மில்லி கிராம், குளோரைடு அளவு, 500 மி.கி., சல்பேட் அளவு, 883 மி.கி., இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, கூட்டுக்குழு செயலாளர் மோகன் கூறியதாவது:
துவைத்தல் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் டி.டி.எஸ்., அளவு லிட்டருக்கு, 2,000 மி.கி., வரை; குடிநீர் தேவைக்கு, 500 மி.கி., வரை இருக்க வேண்டும். சல்பேட் மற்றும் குளோரைடு அளவு தலா, 250 மி.கி., வரை இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இப்பகுதியில் தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. கோணவாய்க்கால்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரை வெளியே வாங்கி பயன்படுத்துகின்றனர். வீடு கட்டவும் இத்தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என கட்டுமான பொறியாளர்கள் எச்சரிக்கின்றனர். குப்பை கிடங்கை மாற்றக்கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். மாநகராட்சி நிர்வாகம் எங்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

