/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜே.இ.இ., தேர்வுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்
/
ஜே.இ.இ., தேர்வுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்
ஜே.இ.இ., தேர்வுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்
ஜே.இ.இ., தேர்வுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்
ADDED : டிச 18, 2025 05:00 AM
கோவை: அரசுப் பள்ளி மாணவர்களை அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வான ஜே.இ.இ., தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், 'வெற்றி பள்ளிகள் திட்டத்தின்' கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, கடலூரில் சிறப்பு உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி, தனியார் பள்ளிகளுக்கு இணையாகத் தரமான மற்றும் முழுமையான கல்வி சூழலை வழங்க, மாவட்டந்தோறும் மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டம் மற்றும் வட்டார அளவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், வெற்றி பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, சனிக்கிழமைகளில் ஜே.இ.இ., நீட்., கியூட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் பங்கேற்கும் மாணவர்களில், திறமையானவர்களுக்கு மேலும் பயிற்சி அளிக்க ஜே.இ.இ., போட்டித் தேர்வுக்கான பிரத்யேக, உண்டு உறைவிட பயிற்சி முகாம், கடலூரில் உள்ள மாதிரி பள்ளியில் வரும் 24ம் தேதி முதல் ஜன. 18ம் தேதி வரை நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்க, சென்னை, கோவை, மதுரை உட்பட 38 மாவட்டங்களில் இருந்து 81 மாணவர்கள், 219 மாணவிகள் என 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
10 மற்றும் பிளஸ் 1ல் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் ஏற்கனவே நடந்த பயிற்சி வகுப்புகளில், அவர்களின் பங்கேற்பு பதிவேடுகளின் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து 9 மாணவர்கள் முகாமில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் -1, தொண்டாமுத்தூர் - 2, எஸ்.எஸ்.குளம் -1 ஆகிய ஒன்றியங்களில் உள்ள பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சி முகாமில், மாதிரிப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் போட்டித் தேர்வு நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

