ADDED : டிச 23, 2025 07:06 AM

வால்பாறை: வாட்டர்பால்ஸ் ரோட்டில் கரடி நடமாட்டம் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்ல வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி நடமாட்டம் அதிகம் உள்ளது. தற்போது, வால்பாறையிலிருந்து அட்டகட்டி செல்லும் வழியில் உள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில், மாலை நேரத்தில் சிறுத்தை, கரடி ரோட்டில் நடமாடுகிறது.
வனத்துறையினர் கூறியதாவது:
வாட்டர்பால்ஸ் ரோட்டில் கரடி நடமாட்டம் இருப்பதால், இரவு நேரத்தில் தொழிலாளர்கள் பஸ்சை விட்டு இறங்கி தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, குறுக்கு வழித்தடத்தில் மாலை நேரத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். ரோட்டில் நடமாடும் கரடியை சுற்றுலா பயணியர் தொந்தரவு செய்யக்கூடாது.
கரடியை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.
டார்ச் லைட் அவசியம் வாட்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், இரவு நேரத்தில் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் மக்கள், அதிக வெளிச்சம் தரும் டார்ச் லைட் வைத்துக்கொள்ள வேண்டும்.
எதிரே வனவிலங்குகள் தென்பட்டால், அவற்றின் நேராக டார்ச் லைட் அடித்தால், அவை விலகி சென்று விடும். அதன்பின் நீங்கள் பயமின்றி நடந்து செல்ல வசதியாக இருக்கும். மனித - வனவிலங்கு மோதலை தடுக்க இரவு நேரத்தில் மக்கள் வெளியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும், என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

