/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளிங்கிரி 'டிரெக்கிங்' திட்டத்துக்கு தடை; பக்தர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
/
வெள்ளிங்கிரி 'டிரெக்கிங்' திட்டத்துக்கு தடை; பக்தர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
வெள்ளிங்கிரி 'டிரெக்கிங்' திட்டத்துக்கு தடை; பக்தர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
வெள்ளிங்கிரி 'டிரெக்கிங்' திட்டத்துக்கு தடை; பக்தர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
ADDED : நவ 12, 2024 05:53 AM

கோவை ; தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ளிங்கிரி டிரெக்கிங் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் பக்தர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த, 20 ஆண்டுகளாக வெள்ளிங்கிரி ஆண்டவர் காவடிக்குழு என்ற குழு சார்பில் பக்தர்கள் ஒன்றிணைந்து கோவை மாவட்டம் பூண்டியில் வெள்ளிங்கிரி மலைக்கு அரசு நிர்ணயித்துள்ள மாதங்களில் மட்டும், புனித ஆன்மிக யாத்திரை மேற்கொண்டு 7வது மலையில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி உணர்வுடன் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வெளியிட்ட டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தின் பட்டியலில் வெள்ளிங்கிரி மலை இடம் பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இது போன்ற நடவடிக்கைகளால் வெள்ளிங்கிரி மலையின் புனித தன்மை பாதிக்கப்படும். மேலும் வெள்ளிங்கிரி மலையானது ஆன்மிக புனித ஸ்தலம். மலையேற்றத்துக்கான சுற்றுலா தலம் இல்லை.
எனவே, டிரெக்கிங் திட்டப்பட்டியலில் இருந்து வெள்ளிங்கிரி மலையை நீக்க வேண்டும். வெள்ளிங்கிரியில் டிரெக்கிங் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.
l கோவை ஆத்துப்பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பாலத்திற்கு கீழே பஸ்ஸில் பயணிக்கும் பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை அமைக்க வேண்டும்.
l பாலக்காடு, பொள்ளாச்சி மார்க்கமாக செல்வதற்கும் டவுனுக்குள் வருவதற்கும் ஏற்ப பொதுமக்கள் வெயில் மழையால் பாதிக்காதவாறு இருப்பதற்கு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. மேம்பால கட்டுமானத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் அமைத்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் 87வது வார்டு செயலாளர் ஜலீல் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
l பூண்டி செல்லும் பாதையில் அமைந்துள்ள மரக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவருக்கு சொந்தமான மூன்று மாடுகளை அவ்வழியே காரில் சென்ற தினேஷ்ராஜா என்பவர் இடித்து காயப்படுத்திவிட்டார். அதற்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆலாந்துறை போலீசில் புகார் கொடுக்க சென்றால் புகாரை எடுக்க மறுக்கின்றனர். எனக்கு தக்க நியாயம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
l விளாங்குறிச்சி வினோபாஜி நகர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று விளாங்குறிச்சி வினோபாஜி நகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், இலவச மனைகேட்டு, 42 மனுக்களும், வீட்டுமனை பட்டாகேட்டு 135 மனுக்களும், வேலைவாய்ப்புக்கு, 10 மனுக்கள், இதர மனுக்கள் 239 என்று மொத்தம், 426 மனுக்கள் வந்தன. விரைவான நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.

