/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடலில் சூட்டை ஏற்படுத்தும் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
/
உடலில் சூட்டை ஏற்படுத்தும் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
உடலில் சூட்டை ஏற்படுத்தும் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
உடலில் சூட்டை ஏற்படுத்தும் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
ADDED : மார் 03, 2024 08:58 PM

மேட்டுப்பாளையம்:கோடைக் காலம் துவங்கியதை அடுத்து, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் இயற்கையான குளிர்ச்சியான உணவு வகைகளை சாப்பிடும்படியும், உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும் இறைச்சி வகைகளை தவிர்க்க வேண்டும், என, அரசு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
கோடை சீசன் துவங்கிய நிலையில், ஆரம்பத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மதியம் ஒரு மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை, மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு, வெயில் அடித்து வருகிறது. இந்த நேரத்தில் நகரில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
இது குறித்து காரமடை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் சுதாகர் கூறியதாவது: பொதுவாக வெயில் காலத்தில், கம்மங்கூழ், தர்ப்பூசணி, நுங்கு, இயற்கையான குளிர்பானங்கள் ஆகியவற்றை குடிப்பது வழக்கம். இந்த உணவு வகைகள் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியவை ஆகும். சிக்கன் சாப்பிடுவதால் உடலில் சூடு அதிகரிக்கும். உடலில் சூடு அதிகரிக்கும் பொழுது, அம்மை, காளான் தொற்று நோய், தோலில் தடிப்பு, கொப்புளங்கள், வயிற்றுவலி ஆகியவை வர வாய்ப்புள்ளது. எனவே உடலுக்கு சூடு ஏற்படும் வகையில் உள்ள, இறைச்சி வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மோர், இளநீர் மற்றும் தினமும், 3 லிட்டர் தண்ணீர் ஆகியவை குடிக்க வேண்டும். பாட்டில்களில் அடைத்த குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மதியம் நேரத்தில், வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.
சாலையின் ஓரங்களில் உள்ள திறந்த வெளி கடைகளில், சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற வேண்டும்.
இந்த வெயில் காலத்தில், வீட்டில் எப்போதும் ஓ.ஆர்.எஸ்., பவுடர் பாக்கெட் வைத்து, தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் கூறினார்.

