/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாள் கெடு
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாள் கெடு
ADDED : பிப் 27, 2024 11:13 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்களே, 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமை வகித்தார். சேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் முரளி குமார், நகராட்சி கமிஷனர் அமுதா, தாசில்தார் சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் பேசுகையில், ''நெடுஞ்சாலை, நகராட்சி இடங்களில், கடைகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள ஷீட்டுகளால் பஸ், லாரிகள் போவதில் சிக்கல் உள்ளது. இதை கடைகாரர்களே அகற்ற வேண்டும். சாலையோர வியாபாரிகள், சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை வைக்கக்கூடாது. பொதுமக்கள் நடந்து செல்ல இடம் விட வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருசக்கர வாகனங்களை சாலைகளில் நிறுத்தக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
2 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்களே ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், நாங்கள் அகற்றிவிடுவோம். அதற்கு உண்டான அபராதமும், விதிக்கப்படும்.
ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் யாரும் ஆக்கிரமிப்புகளை எடுக்கவில்லை. எங்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு தாருங்கள்,'' என்றார்.
கூட்டத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சாலையோர வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.---

