/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகரில் 188 திறந்தவெளி கிணறுகள்... மாறுகின்றன!: மழைநீர் சேகரிக்க புதிய திட்டம்
/
நகரில் 188 திறந்தவெளி கிணறுகள்... மாறுகின்றன!: மழைநீர் சேகரிக்க புதிய திட்டம்
நகரில் 188 திறந்தவெளி கிணறுகள்... மாறுகின்றன!: மழைநீர் சேகரிக்க புதிய திட்டம்
நகரில் 188 திறந்தவெளி கிணறுகள்... மாறுகின்றன!: மழைநீர் சேகரிக்க புதிய திட்டம்
UPDATED : ஜன 03, 2026 05:08 AM
ADDED : ஜன 03, 2026 05:07 AM

கோவை:கோவை நகரில் 188 திறந்தவெளி கிணறுகளை துார்வாரி, இரும்பு கிரில் அமைத்து, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற, 14 கோடியே 96 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
கோவை நகர் பகுதியில் இஷ்டத்துக்கு போர்வெல் போட்டு, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால், நீர் மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.
பருவ மழை காலத்தில் கிடைக்கும் மழை நீரும் கழிவு நீருடன் கலந்து குளங்களில் கலக்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், மழை நீர் தேங்கும் இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
![]() |
மாநகராட்சி அலுவலகங்களில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, மழை நீர் நிலத்துக்குள் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான ரோடுகளில் மழை நீர் வடிந்தோடி வரும் பாதையை தேர்ந்தெடுத்து, ஜெர்மன் டெக்னாலஜியில், மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டமாக, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் எங்கெங்கு திறந்தவெளி கிணறுகள் இருக்கின்றன என மண்டலம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டது.
இதில், கிழக்கு - 42, மேற்கு - 39, வடக்கு - 35, தெற்கு - 60, மத்திய மண்டலம் - 12 என, 188 இடங்களில் திறந்தவெளி கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அப்பகுதியை சுற்றியுள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்தல், கிணற்றை துார்வாருதல், அதன் மேற்பரப்பில் இரும்பு கிரில் அமைத்து பாதுகாத்து, அப்பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் மழை நீர் கிணற்றுக்குள் செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்துதல், அத்தண்ணீர் நிலத்துக்குள் இறங்கும் வகையில் மழை நீர் சேகரிப்புக்கான பணிகள் மேற்கொள்ள, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு கிணறு பகுதியிலும் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென, பூனேவை சேர்ந்த நிறுவனம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
மொத்தம் 188 கிணறுகளை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றுவதற்கு, 14 கோடியே 96 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவிட, மாமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''திறந்தவெளி கிணறுகளை துார்வாரி, பராமரித்து, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றுவதற்கு, திட்ட அறிக்கை தயாரித்தோம். நிதி ஒதுக்கி, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவக்கப்படும்,'' என்றார்.


