/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்: வழக்கமான பணிகள் துவக்கம்
/
தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்: வழக்கமான பணிகள் துவக்கம்
தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்: வழக்கமான பணிகள் துவக்கம்
தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்: வழக்கமான பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 10, 2024 11:48 PM
பெ.நா.பாளையம்:தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெற்றதை ஒட்டி அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் துவங்கின.
தமிழ்நாட்டில், 82 நாட்கள் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் கடந்த, 6ம் தேதி வாபஸ் பெறப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கை மார்ச், 16ம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனால் தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்புகள், ஒப்பந்த புள்ளிகள் கோரல், விழாக்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தடை ஏற்பட்டது. புதிய ஒப்பந்தங்கள் கோர முடியாத காரணத்தால், வளர்ச்சி பணிகள் செய்வதில் தடை ஏற்பட்டது.
குறிப்பாக, மாவட்ட அளவில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகளில் ஈடுபட முடியாமல் போனது.
தலைவர் மற்றும் துணைத் தலைவர் அமரும் அறைகள், மன்ற கூட்ட அறைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன. எம்.எல்.ஏ., அலுவலகங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெற்றதை அடுத்து, 82 நாட்களுக்குப் பிறகு கடந்த, 7ம் தேதி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் அமரும் அறைகள் திறந்து விடப்பட்டன.
பொதுமக்கள் நேரடியாக மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, தங்களுடைய குறைகளை பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டது.
இது குறித்து, உள்ளாட்சி தலைவர்கள் கூறுகையில், 'இதுவரை அவசர, அத்தியாவசிய பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை மதியத்திற்கு பிறகு பெரும்பாலான இடங்களில் சீல் வைக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்களின் அறைகள், வருவாய் துறையினரால் திறந்து வைக்கப்பட்டது. வழக்கமான பணிகள் துவங்கியுள்ளன. இனி திட்டப் பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படும்' என்றனர்.

