/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் வருமா மரங்கள் நிறைந்த அந்த காலம்.. ஞாபகம் வருதே! மேட்டுப்பாளையம் ரோட்டில் இப்போது அனல் காற்று
/
மீண்டும் வருமா மரங்கள் நிறைந்த அந்த காலம்.. ஞாபகம் வருதே! மேட்டுப்பாளையம் ரோட்டில் இப்போது அனல் காற்று
மீண்டும் வருமா மரங்கள் நிறைந்த அந்த காலம்.. ஞாபகம் வருதே! மேட்டுப்பாளையம் ரோட்டில் இப்போது அனல் காற்று
மீண்டும் வருமா மரங்கள் நிறைந்த அந்த காலம்.. ஞாபகம் வருதே! மேட்டுப்பாளையம் ரோட்டில் இப்போது அனல் காற்று
ADDED : ஏப் 23, 2024 10:28 PM

பெ.நா.பாளையம் : மேட்டுப்பாளையம் ரோடு விரிவாக்கத்துக்காக, 14 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணி நடைபெறாததால், பசுஞ்சோலையாக இருந்த மேட்டுப்பாளையம் ரோடு, தற்போது அனல் காற்று வீசும் பாலைவனமாக மாறி உள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு விரிவாக்க பணிகள் கடந்த, 2010ல் துவங்கியது. இதற்காக முதல் கட்டமாக சுக்கிரவார் பேட்டையில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்குப்பாளையம் பிரிவு வரை, ரோட்டோரம் இருந்த, 850 மரங்கள் அப்போது வெட்டி வீழ்த்தப்பட்டன. மரங்களை புகலிடமாக கொண்ட நூற்றுக்கணக்கான பறவைகள், பரிதாபமாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தன.
பாலைவனமாக காட்சி அளிக்கிறது
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் மேட்டுப்பாளையம் ரோட்டில், அவை வெளியிடும் கார்பன் மோனாக்சைடு, மனித உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இம்மரங்கள் காத்துவந்தன.
ஆனால், தற்போது மரங்கள் இல்லாமல் வெட்ட வெளியாக காட்சியளிக்கும் மேட்டுப்பாளையம் ரோட்டில் கோடைகாலம் மட்டுமல்லாமல், ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் அனல் காற்று வீசுகிறது. சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டும்போது, அதற்கு ஈடு செய்யும் பொருட்டு, பல மடங்கு புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும் என, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை ஆகியன அப்போது கூட்டாக அறிவித்தன.
ஆனால், அதற்கான நடவடிக்கையில் இறங்கவில்லை. இதனால் சோலைவனமாக இருந்த மேட்டுப்பாளையம் ரோடு, இப்போது பாலைவனமாக காட்சியளிக்கிறது. கோயமுத்தூர் மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கத்தினர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இப்பகுதியில் மரக்கன்றுகளை நடும் முயற்சியில் இறங்கினர். அதில், ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
இருந்தாலும், பழையபடி மேட்டுப்பாளையம் ரோட்டை சோலைவனமாக மாற்ற அரசு மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கிறது இந்த அமைப்பு. இது குறித்து கோயமுத்தூர் மாவட்ட சாலை பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறியதாவது:
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை உள்ள ரோட்டின் இரு பக்கங்களிலும் இருந்த புளிய மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன.
முதல் கட்டமாக, மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையத்தில் இருந்து தொப்பம்பட்டி பிரிவு வரை ரோடு டிவைடரில், 1,500 மரக்கன்றுகளை நட்டும், அவற்றுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் லாரிகளில் கொண்டு வந்து நீர் ஊற்றினோம். ஆனால், ரோட்டின் இரு பக்கமும் உள்ள சில வர்த்தக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மரங்கள் ஓங்கி வளர்ந்தால், தங்கள் வியாபாரத்திற்கு இடையூறு என கருதி, இரவு நேரத்தில் அதை வெட்டி தள்ளி விட்டனர்.
இதே போல ரோடு ஓரங்களில் வைக்கப்பட்ட சில மரக்கன்றுகள் தற்போது, 20 அடி உயரம் வரை வளர்ந்து உள்ளன. ரோடு ஓரம் தேநீர் விடுதி நடத்தும் சிலர் மரங்களை வெட்டி அகற்றுகின்றனர்.
இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மரங்களுக்கு உரிய எண்களை வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு கூறினார்.

