/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யாருக்காக... இது யாருக்காக? வெயிலில் காய வேண்டும்... மழையில் நனைய வேண்டும்!
/
யாருக்காக... இது யாருக்காக? வெயிலில் காய வேண்டும்... மழையில் நனைய வேண்டும்!
யாருக்காக... இது யாருக்காக? வெயிலில் காய வேண்டும்... மழையில் நனைய வேண்டும்!
யாருக்காக... இது யாருக்காக? வெயிலில் காய வேண்டும்... மழையில் நனைய வேண்டும்!
ADDED : ஜூன் 06, 2024 06:49 AM

வடவள்ளி : வடவள்ளி பகுதியில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடைகள், மக்களுக்கு பயன்படாமலே உள்ளன. தங்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம் என நொந்து போகின்றனர் இப்பகுதி மக்கள்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட, வடவள்ளி பகுதி அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. மருதமலை கோவில், சட்ட கல்லூரி, பாரதியார் பல்கலை, அண்ணா பல்கலை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தனியார் தொழில் நிறுவனங்கள் என ஏராளமான முக்கிய இடங்கள் உள்ளதால், வடவள்ளி பகுதிக்கு, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
மருதமலை சாலையில், சுமார், 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், 36வது வார்டு, வடவள்ளி கருப்பராயன் கோவில் பஸ் ஸ்டாப்பில், வடவள்ளியில் இருந்து, நகருக்கு செல்ல பொதுமக்கள் காத்திருக்கும் பஸ் ஸ்டாப்பில், பயணிகளின் வசதிக்காக மாநகராட்சி சார்பில், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
அங்கு, பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகளும், நிழற்குடையை பயன்படுத்தியும் வந்தனர். ஆனால், அப்பகுதியில், நெடுஞ்சாலைத்துறையினரும், போலீசாரும், விழிப்புணர்வு போர்டு வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பஸ் நிறுத்த வசதியில்லை.
நிழற்குடைக்கு 30 மீட்டருக்கு முன்பே பஸ் நிறுத்தப்படுகிறது. இதனால், பயணிகளும், நிழற்குடையில் இருக்காமல், 30 மீட்டருக்கு முன்பே நின்று, பஸ் ஏறி வருகின்றனர்.
பயணியர் நிழற்குடை இருந்தும், அது மக்களுக்கு பயன்படாததால், வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீசார் தாங்கள் வைத்துள்ள போர்டுகளை, மாற்று இடங்களில் பொருத்த வேண்டும்.
இப்பகுதியில், இடவசதி உள்ளதால், 'பஸ் பே' அமைத்து பஸ்களை நிறுத்தினால், மருதமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும் தவிர்த்து, நிழற்குடையை பயணிகளும் பயன்படுத்தும் வகையில் கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, வடவள்ளியில் மூன்று இடங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும், பயணிகள் நிழற்குடை பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

