/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 விடைத்தாள் நகல் வழங்கும் தேதி எப்போது?
/
பிளஸ் 2 விடைத்தாள் நகல் வழங்கும் தேதி எப்போது?
ADDED : மே 22, 2024 07:55 PM
கோவை:பிளஸ் 2 விடைத்தாள்கள் நகல் வழங்கும் தேதி அறிய, மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், கடந்த 6ம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டன. மாணவர்களுக்கு மொபைல் போன் வழியாக, மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன.
இதைத்தொடர்ந்து, மாணவர்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப விருப்ப பாடங்கள், துறைகள், கல்லுாரிகளைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். எதிர்பார்த்ததைவிட குறைந்த மதிப்பெண் பெற்று விட்டதாக எண்ணும் மாணவர்கள், தங்களது விடைத்தாள்களை அரசு இணையதளத்தில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன் பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விடைத்தாள்கள் பெற விண்ணப்பித்துக் காத்திருக்கும் நிலையில், இதுவரை நகல் வழங்குவதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
இம்மாத இறுதியில் இருந்தே வேளாண், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்னையில் அரசு கவனம் செலுத்தி, உடனடியாக தேதியை அறிவிக்க வேண்டும் என்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவை மண்டல தேர்வு மைய உதவி இயக்குனர் சதீஷ் கூறுகையில், ''விடைத்தாள்கள் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி, இதுவரை அறிவிக்கப்படவில்லை. அறிவித்தவுடன் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, ஒருவாரம் அவகாசம் வழங்கப்படும்.
''கவுன்சிலிங்குக்கு முன்பே முடிவு அறிவிக்கப்பட்டு விடும். முடிவின் நகல், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் வழங்கப்படும். இதனால், மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது,'' என்றார்.

