/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்நிலைகளுக்கு செல்ல அபாய எச்சரிக்கை
/
நீர்நிலைகளுக்கு செல்ல அபாய எச்சரிக்கை
ADDED : ஏப் 29, 2024 11:14 PM
மேட்டுப்பாளையம்:குளம், குட்டை, ஆறு போன்ற நீர் நிலைகளுக்கு செல்லும் வழியில், அபாய எச்சரிக்கை பலகை வைக்க, அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமையிட துணை தாசில்தார் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிகாரிகள் விவாதம் செய்ததன் விபரமாவது: மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சி, மற்றும் ஊராட்சிகளில் குளம், குட்டைகள், ஆறு ஆகிய நீர்நிலைகள் உள்ளன. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர், சிறுவர்கள் தண்ணீரில் விளையாடும் ஆர்வத்தில், குளம், குட்டைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. தண்ணீரில் விளையாடும் போது, நீச்சல் தெரியாதவர்கள், ஆழமான பகுதிக்கு சென்று, தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே இந்த உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், நீர் நிலைகளுக்கு செல்லும் வழியிலும், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, 'அபாய எச்சரிக்கை அத்துமீறி நுழையக்கூடாது' என, அறிவிப்பு இருக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

