/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரியடித்து... பானை உடைத்து கிருஷ்ணஜெயந்தியில் பரவசம்
/
உரியடித்து... பானை உடைத்து கிருஷ்ணஜெயந்தியில் பரவசம்
உரியடித்து... பானை உடைத்து கிருஷ்ணஜெயந்தியில் பரவசம்
உரியடித்து... பானை உடைத்து கிருஷ்ணஜெயந்தியில் பரவசம்
ADDED : ஆக 26, 2024 10:21 PM
கோவை:கோவையில் நேற்று, ஜென்மாஷ்டமி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வீட்டைச் சுத்தம் செய்து, அரிசி மாவால் கிருஷ்ணர் பாதங்களை கோலமிட்டனர். மாவிலை தோரணங்கள், வாழைக்கன்றுகளால் வீட்டை அலங்கரித்தனர். கிருஷ்ணர் படங்களை பட்டாடை, சந்தனம், குங்குமத்தால் அலங்கரித்தனர்.
பால், நெய், வெண்ணெய், தட்டைமுருக்கு, சீடை, பொட்டுக்கடலை மாவு, அவல், அப்பம், சுக்கு கலந்த வெல்லம், லட்டு, நாகப்பழம், கொய்யா, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, வாழை உள்ளிட்ட பழ வகைகளை படைத்து, பூக்கள் தூவியும் கிருஷ்ணர் பாடல்களை பாடியும், நடனமாடியும் மனதார வணங்கினர்.
கிருஷ்ணரை தங்கள் வீட்டுக் குழந்தையாக பாவித்து, பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டும் மகிழ்ந்தனர். பாதங்களில் மாவிட்டு, நடக்க வைத்து பதிவு செய்தனர்.
கோவை கொடிசியா அருகே உள்ள ஜெகன்நாதர் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று அதிகாலை 4:15 மணி முதல் நள்ளிரவு வரை சிறப்பு ஆராதனை, அகண்ட நாம பஜனை, நாம சங்கீர்த்தனம் நடந்தது. இடையே பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவு நடந்தது.
பகவான் ஜெகன்நாதர், பாலகோபாலர், சுபத்ராதேவி ஆகியோருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடுகளும், கோபூஜையும் நடந்தது.
1,008 கலசங்களை எழுந்தருளச்செய்து, புனித நதிகளிலிருந்து கொண்டு வந்த நீரினால், பாலகோபாலருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தி விநோத சுவாமி மகராஜின் கிருஷ்ணலீலா சொற்பொழிவு நடந்தது.
சிறப்பு பட்டிமன்றம், ஆன்மிக கருத்தரங்கம், குழந்தைகள் இசை நிகழ்ச்சி நடந்தது. கண்களை கட்டி உரியடித்து, பானையை உடைக்கும் நிகழ்ச்சிகளும், நடன நாட்டிய கலை நிகழ்ச்சிகளும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை 'கலர்புல்' ஆக மாற்றின.
நகரில் உள்ள பெருமாள் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்திவிழா கோலாகலமாக நடந்தது.

