/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓடையில் சீமைகருவேல மரங்களால் சிக்கல்; தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்னை
/
ஓடையில் சீமைகருவேல மரங்களால் சிக்கல்; தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்னை
ஓடையில் சீமைகருவேல மரங்களால் சிக்கல்; தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்னை
ஓடையில் சீமைகருவேல மரங்களால் சிக்கல்; தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்னை
ADDED : ஏப் 05, 2024 10:45 PM
உடுமலை : பிரதான மழை நீர் ஓடைகளில், சீமை கருவேல மரங்கள் அகற்றப்படாமல், கரையோர பகுதிகள் பாதிக்கும் பிரச்னைக்கு நீண்ட காலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே அமைந்துள்ள உப்பாறு அணைக்கு, நீர்வரத்து அளிக்கும் மழை நீர் ஓடைகள் உடுமலை தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் துவங்குகிறது.
குறிப்பாக, பல்வேறு கிராமங்களின் மழைநீர் ஓடைகள், உப்பாறு ஓடையுடன் கலக்கிறது. உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., பிரதான கால்வாயிலிருந்து, அரசூர் ஷட்டரிலிருந்து ஓடை வழியாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது.
கால்வாயிலிருந்து, 25 கி.மீ., க்கும் அதிகமான துாரத்தில் அமைந்துள்ள உப்பாறு அணைக்கு, ஓடையில் தண்ணீர் திறக்கும் போது, பல கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக இருக்கும்.
இவ்வாறு, உடுமலை தாலுகாவில், 50க்கும் அதிகமான கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக, உப்பாறு உட்பட மழை நீர் ஓடைகளே உள்ளன.
ஓடைகள் பல இடங்களில், ஆக்கிரமிக்கப்பட்டு, நீர் வழித்தடமே காணாமல் போயுள்ளது.
இந்த ஓடை முழுவதுமே சீமைகருவேல மரங்கள் முளைத்து, அடர்ந்த வனப்பகுதியாக காட்சியளிக்கிறது.
செழித்து வளர்ந்துள்ள இம்மரங்களால், நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, மழைப்பொழிவும் குறைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ஓடை செல்லும், பெரியபட்டி, பூளவாடி, ஆமந்தகடவு மற்றும் தாராபுரம் தாலுகா கிராமங்களில், வறட்சி நிரந்தரமாக உள்ளது.இதனால், அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையடைந்துள்ளனர்.
கோடை மழை துவங்கும் முன், உப்பாறு ஓடையில் சீமை கருவேல மரங்களை அகற்றினால், தடுப்பணைகளில் தண்ணீர் தேங்குவதுடன், வறட்சி பகுதி என்ற பெயரும், உப்பாறு படுகைக்கு நீங்கும் வாய்ப்புள்ளது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்னையை தமிழக அரசும் தீர்க்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

