/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை மீதில்லை பிழை! வெள்ளம் செல்ல வடிகால்களே இல்லை... கால்வாயில் அடைத்து நிற்குது குப்பை மலை!
/
மழை மீதில்லை பிழை! வெள்ளம் செல்ல வடிகால்களே இல்லை... கால்வாயில் அடைத்து நிற்குது குப்பை மலை!
மழை மீதில்லை பிழை! வெள்ளம் செல்ல வடிகால்களே இல்லை... கால்வாயில் அடைத்து நிற்குது குப்பை மலை!
மழை மீதில்லை பிழை! வெள்ளம் செல்ல வடிகால்களே இல்லை... கால்வாயில் அடைத்து நிற்குது குப்பை மலை!
ADDED : மே 20, 2024 12:23 AM

-நமது நிருபர்-
கோவையில் கோடையிலேயே மழை துவங்கியுள்ள நிலையில், பல பகுதிகளில் மழைநீர் வடிகால் இல்லாததாலும், இருக்கும் கால்வாய்களிலும் குப்பைகள் அடைத்திருப்பதாலும், இந்த ஆண்டும் மழை வெள்ளம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 257 சதுர கி.மீ., பரப்பளவில் விரிந்துள்ள கோவை நகரில், 44 கி.மீ.,, துாரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையும், 176 கி.மீ., நீளத்துக்கு மாநில நெடுஞ்சாலையும், 2,735 கி.மீ., அளவில் மாநகராட்சி ரோடுகளும் அமைந்துள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு அளவுள்ள ரோடுகளில் கூட மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை.
நீர் தேங்குவது ஏன்?
இயற்கையாகவே கோவை நகரின் அமைப்பு காரணமாக, எந்தப் பகுதியிலும் பெருமளவில் வெள்ளம் தேங்குவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் பாலங்கள், ரோடுகள் போன்ற கட்டமைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாக, ஆங்காங்கே மழை வெள்ளம் தங்குவதும், அவற்றை மோட்டார் வைத்து வெளியேற்ற வேண்டியதும் கட்டாயமாகவுள்ளது.
கோவை நகரிலுள்ள ரோடுகளில் பாயும் மழைநீரை, வடிகால் வாயிலாக கொண்டு சென்று, கோவை நகருக்குள் ஆங்காங்கே அமைந்துள்ள குளங்களில் கலக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
குறிப்பாக, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள், ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றி, மழைநீரை நீர்நிலைகளுக்குக் கொண்டு செல்வது அவசியம். ஆனால், இங்குள்ள அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் யாருமே இதற்காக எந்த முயற்சியுமே எடுக்கவில்லை.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில், மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளைக் கணக்கெடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
லங்கா கார்னர், அவிநாசி ரோடு மற்றும் வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழை வெள்ளத்தைக் குளத்துக்குக் கொண்டு போகவும் சிறப்புத் திட்டங்களைத் தயாரித்து வருவதாகக் கூறுகின்றனர்.
அதற்கு முன், நகருக்குள் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களில் அடைத்துக் கிடக்கும் மண் மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியம்.
அதன்பின், விடுபட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால் அமைத்து, அனைத்தையும் ஒருங்கிணைத்து, நீர் நிலைகளுடன் இணைக்க வேண்டும்; இவற்றைச் செய்யாத வரை, கோவையின் குளங்களில் நல்ல தண்ணீரைத் தேக்குவது கானல் நீராகத்தான் இருக்கும்.
காலம் முழுவதும் வெறும் சாக்கடை சங்கமமான குளங்களில் தான், படகு விட்டு கோவை மாநகராட்சி சம்பாதிக்க வேண்டியிருக்கும்!

