/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எங்களையும் கவனியுங்களேன்!பஸ் வசதி கேட்டு கெஞ்சுகின்றனர் நவக்கரை முருகன்பதி கிராமத்தினர்
/
எங்களையும் கவனியுங்களேன்!பஸ் வசதி கேட்டு கெஞ்சுகின்றனர் நவக்கரை முருகன்பதி கிராமத்தினர்
எங்களையும் கவனியுங்களேன்!பஸ் வசதி கேட்டு கெஞ்சுகின்றனர் நவக்கரை முருகன்பதி கிராமத்தினர்
எங்களையும் கவனியுங்களேன்!பஸ் வசதி கேட்டு கெஞ்சுகின்றனர் நவக்கரை முருகன்பதி கிராமத்தினர்
ADDED : ஏப் 03, 2024 01:32 AM

-- நமது சிறப்பு நிருபர் -
கோவை நவக்கரை அருகேயுள்ள முருகன்பதி கிராமத்துக்கு, பஸ் இயக்கக் கோரி, மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டரிடம், கிராம மக்கள் தொடர்ந்து மனுக்கள் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதிலும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதிலும், சிரமம் ஏற்படுகிறது. லோக்சபா தொகுதி வேட்பாளர் இவர்களை சந்திக்க செல்லும் முன், இதற்கான திட்டத்துடன் செல்வது நலம்.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், கோவை நவக்கரை அருகேயுள்ளது முருகன்பதி கிராமம். மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில், இருளர் பழங்குடியினர் 85 குடும்பங்கள் உள்ளன.
சுற்றுவட்டாரப் பகுதிகளில், 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மழைக் காலங்களில், தோட்ட வேலைக்கு செல்லும் பழங்குடியின மக்கள், மற்ற நேரங்களில், கூலி வேலைக்கு செல்கின்றனர்.
வரிசை கட்டும் மக்கள் பிரச்னைகள்
கிராமத்தின் மிக முக்கிய பிரச்னை, பஸ் வசதி இல்லாதது. நவக்கரையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள இப்பகுதியில், இரண்டு கி.மீ.,க்கு சாலை வசதி இருந்த போதும், ஒரு கி.மீ., குண்டும், குழியுமாக உள்ளதால், இப்பகுதிக்கு பஸ் இயக்கப்படுவது இல்லை.
இதனால் குழந்தைகள், நவக்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நடந்தே சென்று வருகின்றனர். ஆறாவது முதல் பத்தாம் வகுப்பு வரை, வாளையார் அருகில் உள்ள மாவுத்தம்பதி பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. மழை காலங்களில், பள்ளிக்கு செல்வது மிகுந்த சிரமம்.
'எங்கள் பகுதிக்கு பஸ் இயக்க வேண்டும்' என, மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டரிடம் காலங்காலமாக இப்பகுதியினர் மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை இல்லை.
'108'க்கு வழி காட்டணும்
அவசர காலங்களில் மருத்துவ உதவி தேவைப்பட்டாலும், 108 ஆம்புலன்சுக்கு அழைத்தாலும், கிராமத்தில் இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் யாராவது ஒருவர், நவக்கரை சென்று, ஆம்புலன்சுக்கு வழிகாட்ட வேண்டியுள்ளது.
ரேஷன் பொருட்கள் கொண்டு வருவதும் சிரமம்தான். பஸ் இயக்கினால் மட்டுமே, தங்கள் அடுத்த கட்டம் குறித்து சிந்திக்க முடியும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'இங்குள்ள ஒரு கி.மீ., ஓடை பகுதிக்குள் செல்லும் நிலையில், சாலை அமைக்க குறிப்பிட்ட துாரத்துக்கே, 4.75 கோடி ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. அவ்வளவு தொகை ஒதுக்க முடியாததால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டது' என்றார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு, கட்சியினர் இதுவரை இப்பகுதிக்கு செல்லவில்லை. சென்றாலும் இதே கோரிக்கையைதான் மக்கள் முன்வைப்பர்.
இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும், நம்பத்தகுந்த, உறுதியான திட்டத்தை கையில் வைத்துள்ள வேட்பாளர், தைரியமாக இவர்களை சந்திக்கலாம்.

