/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.எஸ்.எம்.இ.,க்கு சிறப்பு குறைதீர் கூட்டம்; மாதம்தோறும் நடத்த தொழில்துறையினர் வலியுறுத்தல்
/
எம்.எஸ்.எம்.இ.,க்கு சிறப்பு குறைதீர் கூட்டம்; மாதம்தோறும் நடத்த தொழில்துறையினர் வலியுறுத்தல்
எம்.எஸ்.எம்.இ.,க்கு சிறப்பு குறைதீர் கூட்டம்; மாதம்தோறும் நடத்த தொழில்துறையினர் வலியுறுத்தல்
எம்.எஸ்.எம்.இ.,க்கு சிறப்பு குறைதீர் கூட்டம்; மாதம்தோறும் நடத்த தொழில்துறையினர் வலியுறுத்தல்
ADDED : பிப் 24, 2025 12:40 AM
கோவை; தொழில்துறையினர் பிரச்னைகள், கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வகையில், குறு, சிறு, நடுத்தர(எஸ்.எம்.எஸ்)தொழில்நிறுவனங்களுக்கான பிரத்யேக குறைதீர் கூட்டம் மாதம்தோறும் நடத்தப்பட வேண்டும் என, தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வருவாய் கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அதேபோன்று, தொழில்துறையினருக்கும் குறைதீர் கூட்டம் குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தொழில்துறையினர் கூறியதாவது:
தொழில் நகரமான கோவையில், தொழில்முனைவோருக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இவற்றில் மின்கட்டணமும், மூலப்பொருள் விலையும் மிக முக்கியமான பிரச்னைகள். இவை மாநில, தேசிய அளவில் அரசு தீர்க்க வேண்டிய பிரச்னை. இவை தவிர துறைசார்ந்த பிரச்னைகள் நிறைய உள்ளன. இவற்றைத் தீர்க்க, வெவ்வேறு துறைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
வீண் அலைச்சலைத் தவிர்க்க, கலெக்டர் தலைமையில் மாதாந்திர எம்.எஸ்.எம்.இ., குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். புதுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் மாதாந்திர தொழில்முனைவோர் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அதுபோன்று இங்கும் நடத்தலாம்.
முதல்வர் ஸ்டாலின் 2024 நவ.,ல் கோவை வந்தபோது, தமிழ்நாடு அனைத்து தொழில்wமுனைவோர் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை இதுதொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட அளவில் தொழில்துறைக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, 'கோப்மா' தலைவர் மணிராஜ் கூறியதாவது:
தொழில்துறையினருக்கான பொதுவான பிரச்னைகளை, குறைதீர் கூட்டத்தில் தெரிவித்து உடனடியாக சரி செய்ய இயலும்.
வரி வசூலிப்பதில் இருந்து உரிமம் பெறுவது, ஆர்டர் பெறுவதில் உள்ள சிக்கல், மின் வாரிய கட்டண விகிதங்கள், மூலப்பொருள் பெறுவதில் உள்ள சிக்கல் என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இவற்றை ஒவ்வொரு முறையும் அமைச்சருக்கோ, முதல்வருக்கோ மனுவாக அனுப்ப வேண்டியுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்துறை, மாவட்ட தொழில்மையம், ஜி.எஸ்.டி., வணிகவரித்துறை, வங்கித் துறை உட்பட்ட தொழில்துறை சார்ந்த பல்வேறு துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் கூடும்போது, நடவடிக்கைகள் எளிதாகவும் துரிதமாகவும் இருக்கும். தொழில்துறைக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

