/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மருந்து பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை! கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
/
போதை மருந்து பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை! கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
போதை மருந்து பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை! கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
போதை மருந்து பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை! கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
ADDED : மே 16, 2024 09:16 PM

கோவை,:''போதை மருந்து பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை மருந்து ஒழிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவர்கள், குறிப்பாக இரு மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இம்மருந்துகள் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இன்றி கொடுக்க கூடாது. இந்த மாத்திரைகள் கோவையில், மருத்துக்கடைகளில் கொடுக்கப்படுவதில்லை.
இதையடுத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் கர்நாடகாவில் இருந்து இம்மாத்திரைகளை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இன்று(நேற்று) கைது செய்யப்பட்டனர். இவர்களில் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியை சேர்ந்த, பிரவீன் ஷெட்டி, 36 என்பவர் முக்கிய குற்றவாளி. இவர் மீது ஏற்கனவே சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில், வழக்கு உள்ளது.
இவர் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் உள்ள மருந்துக்கடையில், பணிபுரிந்தது தெரிந்தது. அந்த மருந்துக்கடையின் உரிமையாளர் வசந்த் ஷெட்டிக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர் தப்பி விட்டார். மாத்திரைகளை தயாரிக்கும் மும்பை நிறுவனத்தின் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட், ராஜேஷ் வாயிலாக இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசாரின் விசாரணையில் ஐந்து பேரும் கோவையில் இருப்பது தெரிந்து கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் கடந்த ஆறு மாதங்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகளை கோவையில் விற்பனை செய்துள்ளது. ஊசியாக பயன்படுத்தப்படும் இம்மாத்திரை, மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடியது.
முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதால், போதை மருந்து வினியோகம் தடைபடும்.
இம்மாத்திரைகளின் விலை, ரூ.14 தான். ஆனால், இவர்களுக்கு ரூ.60 க்கு வினியோகிக்கப்பட்டு, அதை இவர்கள் ரூ.300 க்கு விற்பனை செய்துள்ளனர்.
பஸ் டிரைவர்கள் மது அருந்தி பஸ்களை இயக்குவதை தடுக்க உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

