/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
/
கோடையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
ADDED : மே 01, 2024 11:13 PM
உடுமலை : வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூறியிருப்பதாவது: குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்களின் உடல்நலத்தை சீராக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்லக்கூடாது.
நீர்ச்சத்தை அதிகரிக்கும் திரவங்களை, அடிக்கடி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வெப்பம் தொடர்பான நோய்களை கண்டறிய வேண்டும்.
தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை, நாள்தோறும் இருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகில் தொலைபேசி இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
வேலை உறுதி திட்டப்பணிகளில், மதியம், 12:00 மணிக்கு மேல் பணிசெய்வதை தவிர்க்க வேண்டும்.
கால்நடைகளை நிழல் தரும் கூரைகளின் அடியில் கட்டவும், அவைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
தற்போது கோடையின் தாக்கம் அதிகம் இருப்பதால், மின் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும், மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தால், வீட்டின் மேற்புறம் உள்ள இரும்பு சூடாகி மின்விசிறிகள், டியூப்லைட்கள் போன்றவை கழன்று கீழே விழுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. கோடை முடியும் வரை, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

