/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றப்பத்திரிகை ஜெராக்ஸ் எடுக்க ரூ.1.5 கோடி! நிதியின்றி 'பைன் பியூச்சர்' வழக்கு இழுபறி
/
குற்றப்பத்திரிகை ஜெராக்ஸ் எடுக்க ரூ.1.5 கோடி! நிதியின்றி 'பைன் பியூச்சர்' வழக்கு இழுபறி
குற்றப்பத்திரிகை ஜெராக்ஸ் எடுக்க ரூ.1.5 கோடி! நிதியின்றி 'பைன் பியூச்சர்' வழக்கு இழுபறி
குற்றப்பத்திரிகை ஜெராக்ஸ் எடுக்க ரூ.1.5 கோடி! நிதியின்றி 'பைன் பியூச்சர்' வழக்கு இழுபறி
ADDED : ஆக 29, 2024 02:46 AM
கோவை: பைன் பியூச்சர் வழக்கில், குற்ற நகல் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால், விசாரணை நிலுவையில் உள்ளது.
கோவையில் செயல்பட்டு வந்த 'பைன் பியூச்சர் ' என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், 49,276 பேரிடம், 359 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அதன் பங்குதாரர்கள் செந்தில்குமார், விவேக், நித்யானந்தம், மேலாளர் சத்ய லட்சுமி ஆகியோர், 2013ல் கைது செய்யப்பட்டனர்.
அதன் பிறகு, அந்நிறுவனத்திற்கு பணம் வசூலித்து கொடுத்த ஏஜன்டுகள் 38 பேரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மீது, கோவை 'டான்பிட்' கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை 50,000 பக்கம் உள்ளதால், மொத்தம், 24 லட்சம் பக்கத்திற்கு மேல் நகல் எடுக்க, 1.5 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என கணக்கிடப்பட்டது. இதற்கு நிதி ஒதுக்க கோரி, பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் அரசுக்கு அனுப்பிய அறிக்கையும், கடந்த நான்கு ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதிக பணச்செலவை குறைக்க, பென்டிரைவில் குற்ற நகல் ஆவணங்களை பதிவு செய்து வழங்க அனுமதி கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில், அப்பீல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கோவை டான்பிட் கோர்ட்டில், வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இ- பைலிங் முறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதால், குற்றப்பத்திரிகை நகலை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்து பார்க்கும் வசதி ஏற்படுத்தலாமா என, அரசு மற்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர் தரப்பு வக்கீல்கள் பதில் அளிக்க, வரும் 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

