/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கீறல் விழுந்த ரெக்கார்டு'களாய் வாக்குறுதிகள் காலம், காலமாக நீடிக்கும் பிரச்னைகள்
/
'கீறல் விழுந்த ரெக்கார்டு'களாய் வாக்குறுதிகள் காலம், காலமாக நீடிக்கும் பிரச்னைகள்
'கீறல் விழுந்த ரெக்கார்டு'களாய் வாக்குறுதிகள் காலம், காலமாக நீடிக்கும் பிரச்னைகள்
'கீறல் விழுந்த ரெக்கார்டு'களாய் வாக்குறுதிகள் காலம், காலமாக நீடிக்கும் பிரச்னைகள்
ADDED : ஏப் 14, 2024 10:46 PM
வேட்பாளர்கள் அள்ளி வீசும் வாக்குறுதிகளை அப்படியே நம்பி ஓட்டளித்த தலைமுறை, மெல்ல மாறி, படித்த, சிந்தித்து ஓட்டளிக்கும் தலைமுறை வந்துவிட்டது. தீர்க்கப்படாத பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அல்லாத, வெற்று வாக்குறுதிகள், வேட்பாளர்களுக்கு ஓட்டுகளை தராது என்பதே யதார்த்தம்.
அத்திக்கடவு 'அரசியல்'
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கடந்த எதிர்பார்ப்பு அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையிலான இத்திட்டம், 1,652 கோடி ரூபாயில் நிறைவு பெற்றும், செயல்பாட்டுக்கு வரவில்லை.
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், திட்டம் நிறைவேறும்' என 'உடைந்த ரெக்கார்டு' போன்று, அதே வாக்குறுதியை தான், லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் வழங்குகின்றனர்.
நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் பெருமழை பெய்து, பில்லுார் அணை திறந்து விடப்பட்டு, அந்த நீர், பவானி ஆற்றில் ஆர்ப்பரித்து, காலிங்கராயன் அணைக்கட்டை தாண்டி உபரிநீராக பெருக்கெடுத்து ஓட வேண்டும்.
அந்த உபரிநீரை தான், அத்திக்கடவு திட்டத்துக்கு எடுக்க முடியும். பவானி ஆற்றில் நீர் இல்லாதபோது அத்திக்கடவு திட்ட கட்டமைப்புகளை வேறு ஏதாவது வகையில் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி வாக்காளர் மத்தியில் எழுகிறது. இதற்கு வேட்பாளர்களிடம் பதில் இல்லை.
ரயில் பயண கனவு
திருப்பூர் தொகுதியில் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படும் என, வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். திருப்பூர் நகரம் தவிர்த்து, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட ஆறு சட்டசபை தொகுதிகளும், ரயில் போக்குவரத்தையே கண்டிராத பகுதிகளாக உள்ளன.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் முதல் தாளவாடி, கெட்டவாடி வழியாக சத்தியமங்கலம் வந்து, மேட்டுப்பாளையம் ரயில் பாதை இணைப்பது; சத்தி முதல் கோபி, அவிநாசி வழியாக திருப்பூர் ரயில் பாதையில் இணைப்பது; கோபி வழியாக தாராபுரம் மற்றும் பழநி ரயில் பாதை என, பல வித திட்டங்கள் குறித்து ஆய்வு நடந்தது. இத்திட்டத்தை துாசு தட்டி, ரயில் சேவையை மேம்படுத்துவோம் என, வேட்பாளர்கள் 'மூச்சு' விடுவதில்லை.
இவைபோன்று ஒவ்வொரு தொகுதி சார்ந்தும், பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாத பிரச்னைகள் உள்ளன. கீறல் விழுந்த ரெக்கார்டு போன்று ஒற்றை வரியில் வாக்குறுதி அளித்துவிட்டு செல்லும் வேட்பாளர்களால், அவை தீர்க்கப்படாத பிரச்னைகளாகவே நீடிக்கின்றன.

