/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளைவித்த காய்கறி... விற்பதிலும் போராட்டம்! உழவர் சந்தையில் பிரச்னைகள் ஏராளம்
/
விளைவித்த காய்கறி... விற்பதிலும் போராட்டம்! உழவர் சந்தையில் பிரச்னைகள் ஏராளம்
விளைவித்த காய்கறி... விற்பதிலும் போராட்டம்! உழவர் சந்தையில் பிரச்னைகள் ஏராளம்
விளைவித்த காய்கறி... விற்பதிலும் போராட்டம்! உழவர் சந்தையில் பிரச்னைகள் ஏராளம்
UPDATED : ஜூன் 01, 2024 07:11 AM
ADDED : மே 31, 2024 11:18 PM

உடுமலை:உடுமலை உழவர் சந்தையில், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரம் மேம்படுத்தப்படாமல் தொடர்ந்து மோசமான நிலையில் காய்கறி விற்பனை நடக்கிறது.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உழவர் சந்தை அமைந்துள்ளது. நாள்தோறும் அதிகாலை, 4:00 மணி முதல் காலை 10:30 மணி வரையிலும், மக்கள் வாடிக்கையாக வந்து காய்கறி, கீரைகளை வாங்கிச்செல்கின்றனர்.
உடுமலை சுற்றுபகுதியான கிழுவங்காட்டூர், ஆண்டியகவுண்டனுார் உட்பட பல்வேறு கிராமப்பகுதிகளிலிருந்தும், காய்கறி மற்றும் கீரைகள் வரத்து உள்ளது.
குறிப்பாக, உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில், பத்துக்கும் மேற்பட்ட கீரை வகைகளின் விளைச்சல் இருப்பதால், உழவர் சந்தை கீரை விற்பனைக்கு பிரபலமாக உள்ளது.
ஆனால் சந்தையின் அடிப்படை வசதிகள் மோசமான நிலையில் இருப்பதால், விவசாயிகள் மட்டுமின்றி, அங்கு சென்றுவரும் பொதுமக்களும் நாள்தோறும் அவதிப்படுகின்றனர்.
இடநெருக்கடியில் சந்தை
சந்தையில் சராசரியாக, 60 முதல் 80 விவசாயிகளும், விடுமுறை, திருவிழா நாட்களில் நுாற்றுக்கும் அதிகமானவர்களும் காய்களை சந்தைப்படுத்துகின்றனர்.
அதேபோல் சராசரி நாட்களில், ஆயிரம் பேர் வரையிலும், விடுமுறை நாட்களில் இரண்டாயிரத்தை எட்டும் நிலையிலும், சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை உள்ளது. மொத்தமாக இங்கு, 71 கடை மேடைகள் உள்ளன.
சில நாட்களில், விவசாயிகள் கூட்டம் குறைந்திருந்தாலும், அதிகமாக இருக்கும் நாட்களில் இட நெருக்கடியால், தங்களின் காய்களை சந்தைப்படுத்துவதற்கு முடியாமல், நடைபாதைகளை மறைத்துதான் கடைபோடுகின்றனர்.
இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படுவதால், இப்போது நடைபாதையில் கடைபோடுவது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது.
தேங்கும் மழைநீர்
மழைநாட்களில் இவ்வாறு பாதையில் காய்களை சந்தைப்படுத்துவோர், சந்தைக்கு வருவதையும் தவிர்த்து விடுகின்றனர்.
வளாகத்தில் உள்ள நடைபாதையின் நிலையும் மேம்படுத்தப்படாமல், முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைநீர் தேங்கும் பிரச்னைக்கும் தீர்வு இல்லாமல் தொடர்கிறது. நடைபாதை கடைகளால், பொதுமக்கள் சந்தையில் சுற்றிவருவதற்கும், மற்ற கடைகளுக்கு செல்வதும் நெருக்கடியான சூழலாகவே உள்ளது.
சுகாதாரம் என்னாச்சு
சந்தையின் முன்பு கழிவுகள் குவிந்தும், கழிவுநீர் தேங்கியும், கால்நடைகள் அவற்றை மேய்ந்துகொண்டிருக்கும் காட்சிகள் நாள்தோறும் காணப்படுகிறது.
சந்தையின் முன்பு முழுமையான சுகாதாரத்தை பராமரிக்க, நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கழிவுநீர் தேங்குவதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டுள்ளது.
சந்தை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் தீவிரம் காட்டப்படுவதில்லை. உழவர் சந்தையில் மீதமாகும் காய்கறி கழிவுகளை அப்புறப்படுத்துவதில், நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் மீதமாகும் காய்கறி கழிவுகளை விவசாயிகளே எடுத்துச்செல்கின்றனர்.
சந்தைக்கு முன்புறம், ரோட்டோரம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்வதால், சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்படுகிறது. அவ்வாறு ஆக்கிரமித்து விற்பனை செய்யும் வியாபாரிகள், கழிவுகளை சந்தையின் முன்பு கொட்டுகின்றனர்.
இப்பிரச்னையை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு, உழவர் சந்தை நிர்வாகத்தின் சார்பில் கருத்துரு அனுப்பியும், வேளாண் விற்பனை துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
சுகாதாரம் பிரச்னையாக இருப்பதால், சந்தைக்கு வருவோர் முகம் சுழிக்கின்றனர். சில நேரங்களில் திரும்பியே செல்கின்றனர்.
சந்தையில் உள்ள அலுவலர்களுக்கான கழிப்பறையின் செப்டிக் டேங்க் பகுதி மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அதிலிருந்து கழிவுநீர் துர்நாற்றம் சந்தை முழுவதுமே பரவுகிறது. விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.
நாள்நோறும் இடநெருக்கடியிலும், துர்நாற்றத்திலும்தான் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.
வசதிகள் இல்லை
விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்பெறும் வகையில் காய்கறிகளின் விலைப்பட்டியல், சில மாதங்களுக்கு முன்பு உழவர் சந்தை நிர்வாகத்தின் சார்பில் டிஜிட்டல் போர்டாக மாற்றப்பட்டது.
தற்போது போர்டு பழுதடைந்து உள்ளது. மீண்டும் அதை புதுப்பிப்பதற்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டாலும் நடவடிக்கை இதுவரை இல்லை.
விவசாயிகளுக்கு எலக்ட்ரானிக் தராசு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்த முறையான சார்ஜ் வசதி இல்லாமல் பலரது தராசுகளும் பயனில்லாமல் போய்விட்டது.
இவ்வாறு விவசாயிகளுக்கு தனிப்பட்ட வசதிகளும் இல்லாமல், பொதுமக்கள் வந்து செல்வதற்கும், விவசாயிகள் காய்களை சந்தைப்படுத்துவதற்கும் பொதுவான வசதிகளும் மேம்படுத்தப்படாமல், உடுமலை உழவர் சந்தை கண்டுகொள்ளப்படாத நிலையில் உள்ளது.
இந்நிலை தொடரும் பட்சத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி, உழவர் சந்தையை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கையும் சரிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது:
வேளாண் விற்பனை துறையின் சார்பில், உழவர் சந்தையில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து பட்டியல் கேட்டுள்ளனர். வளாகத்தில் மேம்படுத்தப்பட வேண்டிய நடைபாதை, கழிப்பறை செப்டிக் டேங்க் வசதி, கண்காணிப்பு கேமரா உட்பட அனைத்தும் பட்டியல் இடப்பட்டு வருகிறது.
உழவர் சந்தையில், விவசாயிகள் கழிவுகளை மக்கும் மக்காத வகையில் பிரித்து போடுவதில் அலட்சியமாக உள்ளனர். இதனால் அவர்களே கழிவுகளை திரும்ப எடுத்துச்செல்கின்றனர்.
சந்தையின் முன்புள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தான் வெளியில் கழிவுகளை கொட்டுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றினால் இப்பிரச்னை சரியாகும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

