/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எப்., தொகை செலுத்தாத நிறுவனத்துக்கு அபராதம்
/
பி.எப்., தொகை செலுத்தாத நிறுவனத்துக்கு அபராதம்
ADDED : ஏப் 24, 2024 10:11 PM
கோவை: கோவையில் பி.எப்., தொகையை செலுத்தாத தனியார் நிறுவனத்துக்கு, நீதி மன்றம் அபராதம் விதித்துள்ளது.
ஒவ்வொரு நிறுவனமும், வருங்கால வைப்பு நிதி பங்களிப்பான 12 சதவிகிதத்தை, ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, நிறுவனத்தின் பங்களிப்பான 12 சதவிகிதம் மற்றும் இதர தொகைகளையும் சேர்த்து, பி.எப்., நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் செலுத்துவது கட்டாயமாகும்.
இந்நிலையில், கோவையில் இயங்கி வரும் சதீஷ் இன்ஜினியரிங் அண்ட் கியர் இண்டஸ்ட்ரிஸ் என்ற நிறுவனம், 1992ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பு தொகை, நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் அதன் இதர தொகைகளான 19 ஆயிரத்து 350 ரூபாயை செலுத்தத் தவறிவிட்டது.
இது குறித்து, கோவை மண்டல பி.எப்., நிறுவனம் சார்பில், கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அந்த நிறுவனத்துக்கு எதிராகவும், அதன் பங்குதாரர்களான கோமதி மற்றும் ஆர்.சேகர் ஆகியோர் மீதும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த, 20ம் தேதி, அந்த நிறுவனம் மற்றும் பங்குதாரர்களான கோமதி, ஆர்.சேகர் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் -அபராதத் தொகையுடன், நீதிமன்றம் முடியும் வரை, ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க, அனைத்து நிறுவனங்களும் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர தொகைகளை, குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த வேண்டும் என, கோவை மண்டல பி.எப்., கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

