/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதி
/
அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதி
ADDED : மே 27, 2024 12:24 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் திருப்பூர், ஈரோடு செல்லும் பயணிகள்,கழிப்பிட வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டை இடித்து விட்டு, 8.63 கோடி ரூபாய் செலவில், புதிதாக கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் பயணிகளுக்கு எவ்வித பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை, நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், கோவை செல்லும் பஸ்கள் நின்று வந்த வழக்கமான இடத்திலேயே, தற்போதும் கோவை பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த பஸ்கள் நிறுத்தும் இடத்திற்கு அருகே உள்ள காலி இடத்தில், திருப்பூர், ஈரோடு, திருச்சி, தேனி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அப்பகுதியில் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம், பயணிகள் நிழல் கூடம் அமைக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக, பயணிகள் வெயிலில் நின்று அவதிப்பட்டனர். தற்போது மழை பெய்து வருவதால், ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல், மழையில் நனைந்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் தற்காலிக நிழல் கூடம் அமைக்க வேண்டும். கோவை பஸ்கள் நின்ற இடத்தில், நகராட்சி கட்டண கழிப்பிடம் இருந்தது. பஸ் ஸ்டாண்ட் இடித்து கட்டுவதால், அந்த கழிப்பிடமும் இடிக்கப்பட்டது. அதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தேனி செல்லும் பயணிகள், கழிப்பிட வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு கழிப்பிட வசதியை உடனடியாக செய்து தர வேண்டும். இரவில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து இருப்பதால், பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே மின்விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.

