/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய குடிநீர் திட்டப் பணிகள் தொய்வு; மக்கள் புகார்
/
புதிய குடிநீர் திட்டப் பணிகள் தொய்வு; மக்கள் புகார்
புதிய குடிநீர் திட்டப் பணிகள் தொய்வு; மக்கள் புகார்
புதிய குடிநீர் திட்டப் பணிகள் தொய்வு; மக்கள் புகார்
ADDED : மே 17, 2024 10:43 PM
மேட்டுப்பாளையம்;சிறுமுகை பேரூராட்சியில், 19.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும், புதிய குடிநீர் திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
சிறுமுகை பேரூராட்சியில்,18 வார்டுகள் உள்ளன. வச்சினம்பாளையத்தில் பவானி ஆற்றில் இருந்து, நாள் ஒன்றுக்கு, 33 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, சுத்தம் செய்து, அனைத்து வார்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. பேரூராட்சியில், 4,900 வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பேரூராட்சியில், அம்ருத் திட்டத்தின் கீழ், 19.95 கோடி ரூபாய் செலவில், குடிநீர் விஸ்தரிப்பு திட்டப் பணிகள் கடந்த ஆண்டு, ஜூன் மாதம் துவங்கி, பணிகள் நடைபெறுகின்றன. பேரூராட்சியில், 14 கிலோ மீட்டருக்கு புதிதாக மெயின் குடிநீர் குழாயும், 65 கிலோ மீட்டருக்கு பகிர்மான குடிநீர் குழாயும் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
குழாய் பதித்த இடங்களில், இன்னும் கான்கிரீட் போடாமல் உள்ளது. பணிகளும் மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. ஓராண்டில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை, இன்னும் பணிகள் செய்து முடிக்காமல் உள்ளது. எனவே பேரூராட்சி அலுவலர் ஒப்பந்ததாரரிடம் பேசி, பணிகளை விரைவாக செய்து முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கூறினர்.
இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறியதாவது: பேரூராட்சியில் தற்போது, 10 இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. புதிதாக, கிச்சகத்தியூர் சுத்திகரிப்பு நிலையம், சந்தை வளாகம் ஆகிய இரண்டு இடங்களில், தலா, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலைத் தொட்டிகளும், பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலைத் தொட்டி, காந்தவயல் மொக்கை மேடு பகுதியில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிய மேல்நிலைத் தொட்டி என, நான்கு தொட்டிகள் கட்டி முடியும் தருவாயில் உள்ளன.
தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி, ஏதேனும் கசிவு உள்ளதா என சோதனைக்காகவும், கியூரிங்காகவும் வைக்கப்பட்டுள்ளது.பேரூராட்சி பகுதிகளில் மெயின் மற்றும் பகிர்மான குழாய்கள் பதித்து முடியும் தருவாயில் உள்ளது. குழாய் பதித்த இடங்களில் குழாயில் தண்ணீர் கசிவு மற்றும் தண்ணீரின் அழுத்தம் சரியாக உள்ளதா என, சோதனை நடைபெறுகிறது.
குழாயில் தண்ணீர் கசிவு இல்லாத பட்சத்தில் மட்டுமே, சாலையில் குழாய் பதித்த இடங்களில், கான்கிரீட் போடப்படும். இதுவரை, 70 சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் பணிகளை விரைவாக செய்து முடிக்க, ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயல் அலுவலர் கூறினார்.

