/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நித்தீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்: ஆறு கால பூஜைக்கு பின் சிறப்பு வழிபாடு
/
நித்தீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்: ஆறு கால பூஜைக்கு பின் சிறப்பு வழிபாடு
நித்தீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்: ஆறு கால பூஜைக்கு பின் சிறப்பு வழிபாடு
நித்தீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்: ஆறு கால பூஜைக்கு பின் சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 19, 2024 10:43 PM

நெகமம்:நெகமத்தில் உள்ள, பழமை வாய்ந்த நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில், நாளை, 21ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.
நெகமத்தில் உள்ள, நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன கோவிலாகும். இக்கோவிலில் உள்ள சுவாமிக்கு நியமபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
காலப்போக்கில், சுவாமிக்கு நித்தீஸ்வரர் என்று பெயர் சூட்டி பக்தர்கள் அழைக்க துவங்கினர். கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியதாக கோவில் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் சிறப்பாக, நேமரிஷி சித்தர் சிவபெருமானை வழிபாட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேமரிஷி சித்தர் கப்பளாங்கரையில் உள்ள மாமாங்கம் நீரோடையில் குளித்து விட்டு, இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில் திருப்பணியின் போது லிங்கத்தில் நேமரிஷி சித்தர் காட்சியளித்தார் என, தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது. நேமரிஷி என்ற பெயரில் இருந்து, நேமம் என்பது மருவி நாளடையில் அது நெகமம் என பெயர் பெற்றது.
நேரிளமங்கை அம்மனின் பெயர் காரணத்துக்கு, நேர் என்பது 'என்றும்'; இளமங்கை என்பது 'இளமை' என்றும் பொருள் கொள்கிறது. இதனால், நேரிளமங்கை, இளமை உடையவள் என, பொருளாகிறது.
கோவிலின் தீர்த்த சிறப்பாக, கோவில் அருகில் தீர்த்த கிணறு உள்ளது. இது நேமரிஷி சித்தரால் உருவாக்கப்பட்டதால், நேமரிஷி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கடும் வறட்சி நிலவிய காலத்திலும் இக்கோவிலின் தீர்த்த கிணறு வற்றாமல் இருந்தது தனி சிறப்பாக பக்தர்கள் கூறுகின்றனர்.
கோவிலின் தல விருட்சமாக நாவல் மரம் உள்ளது. கோவில் வளாகத்தில், ராஜ கணபதி, ஞான தண்டாயுதபாணி, கால பைரவர், கனகசபை, நவகிரஹ தெய்வங்கள், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நேமரிஷி சன்னதி, நந்திகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி போன்ற பரிவார தெய்வங்களுக்கும் சன்னதி உள்ளது.
கோவிலின் தனி சிறப்பாக, திருமலை நாயக்கர் வந்து வழிபட்ட தலமாகவும் உள்ளது. இதன் அடையாளமாக, கோவில் வளாகத்தில், ஜானகியம்மாள் சன்னதி கட்டப்பட்டுள்ளது.
கோவிலில், சுயம்வர பார்வதி பூஜை செய்தால், திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். மிருத்தியுஞ்சய ஹோமம் செய்து, 60வது கல்யாணம் மற்றும் 80வது சதாபிஷேகம் செய்வது தனி சிறப்பாகும். உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்கள் நீங்கும் தலமாகவும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில், 39 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் பக்தர்கள் இணைந்து, 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோவில் புனரமைப்பு மற்றும் திருப்பணிகள் மேற்கொண்டுள்ளனர்.
கோவிலில், கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. இதற்காக, 23 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆறு கால யாக பூஜைக்கு பின், நாளை, 21ம் தேதி காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை கும்பாபிேஷகம் நடக்கிறது. சுற்றுப்பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கும்பாபிேஷகத்தில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

