/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஓட்டு கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார்'
/
'ஓட்டு கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார்'
ADDED : ஏப் 15, 2024 01:07 AM
கோவை;கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, இ.கம்யூ.,மாநில செயலாளர் முத்தரசன் ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி 'தி.மு.க., அழிந்து விடும்' என பேசுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை அ.தி.மு.க., என்ற கட்சி இனி அழிந்து விடும் என்று பேசுகிறார். அப்படி என்றால் தேர்தலுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளையும் இவர்கள் அழித்து விடுவார்களா. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரிகள் போல் பேசுகின்றனர்.
இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவால் பிரச்னை இல்லை. பா.ஜ.,வால்தான் பிரச்னை. அதனால் இந்த தேர்தலில் இவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். மோடி கேரண்டி என்ற தலைப்பில் பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் வரும் ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளனர். ஏற்கனவே வெளிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லியதை எல்லாம் செய்து விட்டீர்களா என்று கேட்டால் பதில் இல்லை.தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வராத மோடி, நிதி கொடுக்காத மோடி, இப்போது தமிழக மக்களிடம் ஓட்டுக்கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார். இதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

