/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜவாய்க்கால் நீர் வழிப்பாதையில் குப்பை மலை; மழை வெள்ள பாதிப்பு அபாயத்தில் நகரம்
/
ராஜவாய்க்கால் நீர் வழிப்பாதையில் குப்பை மலை; மழை வெள்ள பாதிப்பு அபாயத்தில் நகரம்
ராஜவாய்க்கால் நீர் வழிப்பாதையில் குப்பை மலை; மழை வெள்ள பாதிப்பு அபாயத்தில் நகரம்
ராஜவாய்க்கால் நீர் வழிப்பாதையில் குப்பை மலை; மழை வெள்ள பாதிப்பு அபாயத்தில் நகரம்
ADDED : மே 24, 2024 10:57 PM

உடுமலை : உடுமலையில், ராஜவாய்க்கால் நீர் வழித்தடத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், மழை காலங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, ஏழு குளங்கள் பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது. உடுமலை மேற்கு பகுதிகளில் பெய்யும் மழை வெள்ள நீர், ஏழு குளங்களுக்கு வருகின்றன.
இக்குளங்கள் நிரம்பி, இறுதிக்குளமான ஒட்டுக்குளம் நிரம்பியதும், உபரி நீரி வெளியேறும் ஓடையாகவும், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்யும் மழை வெள்ள நீர் வடியும் வகையிலும், 25 கி.மீ., துாரம் ராஜவாய்க்கால் நீர் வழிப்பாதை அமைந்துள்ளது.
இந்த ராஜவாய்க்கால், உடுமலை நகரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளதோடு, இப்பகுதிகளில் பெய்யும் மழை வெள்ள நீர் சென்று, உப்பாறு ஓடையில் இணையும் வகையில், இயற்கை நீர் வழித்தடமாக உள்ளது.
மழை காலங்களில் அபரிமிதமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் இந்த ராஜவாய்க்கால் ஓடையை, பராமரிப்பது குறித்து,பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
இதனால், நீர் வழிப்பாதை பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகியுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த நீர் வழிப்பாதையும் குப்பை, கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
கணக்கம்பாளையம் ஊராட்சி, உடுமலை நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் கழிவுகள் இங்கு கொட்டப்படுகிறது. மேலும், இறைச்சி, மீன் கழிவுகள், தனியாரால் கொட்டப்படும் குப்பை, அபாயகரமாக கழிவுகள் தினமும் பல டன் கொட்டப்பட்டு வருகிறது.
அதிலும், திண்டுக்கல் - கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும், உடுமலை புற நகர் பகுதியில், பாலத்தின் கீழும் கழிவுகள் கொட்டப்பட்டு, நீர் செல்லும் பாதை முழுவதும், மலைபோல் கழிவுகள் தேங்கியுள்ளன. பல இடங்களில், நீர் வழிப்பாதை முழுவதும் கழிவுகள் கொட்டி மறிக்கப்பட்டுள்ளது.
இதனால், மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உடுமலை நகரம் மற்றும் பொள்ளாச்சி ரோடு, செஞ்சேரிமலை ரோட்டிலுள்ள வீடுகள், விவசாய நிலங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது.
பிரதான ரோட்டில் போக்குவரத்து பாதிப்பும், வெள்ளம் அதிகரித்தால், உயர்மட்ட பாலம் மற்றும் ரோடு சிதிலமடையும் அபாயமும் உள்ளது.
எனவே, ராஜவாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி, எளிதாக மழை வெள்ள நீர் செல்லும் வகையில் துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

