/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர்ந்து உயரும் மக்காச்சோளம் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
/
தொடர்ந்து உயரும் மக்காச்சோளம் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர்ந்து உயரும் மக்காச்சோளம் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர்ந்து உயரும் மக்காச்சோளம் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 02, 2024 01:14 AM

உடுமலை:உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விலையும் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., பாசனம், அமராவதி மற்றும் இறவை பாசன நிலங்களில், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
உரிய விலை கிடைக்காதது, படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், சாகுபடி பரப்பு குறைந்த நிலையில், நடப்பாண்டு, விலை உயர்வால், விவசாயிகள் மத்தியில் மீண்டும், மக்காச்சோளம் சாகுபடி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் கொள்முதல் செய்து வந்த நிலையில், தற்போது எத்தனால் உற்பத்திக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுவதால், கொள்முதல் செய்வதில் பெரிய நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன.
உடுமலை பகுதிகளில், ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு சீசன் அறுவடை, டிச., முதல் மார்ச் வரை இருக்கும் நிலையில், பருவ மழை தாமதம் காரணமாக, சாகுபடி பணிகளும் தாமதமாக துவங்கியது. தற்போது, இப்பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
அறுவடை துவக்கம் முதலே, மக்காச்சோளம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த, 10 நாட்களில் ஒரு குவிண்டாலுக்கு, 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, மக்காச்சோளம் டெலிவரி, ஒரு குவிண்டால், 2,520 ரூபாய் வரை காணப்பட்டது. வியாபாரிகள் வயல்களில், குவிண்டால், ரூ. 2,350 முதல், 2,370 வரை கொள்முதல் செய்து வருகின்றனர்.
நடப்பு சீசனில் நீர் பற்றாக்குறை இருந்தாலும், ஏக்கருக்கு, சராசரியாக, 30 குவிண்டால் வரை மகசூல் காணப்படுகிறது. விலை உயர்ந்து வருவதால், அறுவடையாகும் மக்காச்சோளத்தை விவசாயிகள் இருப்பு வைக்காமல், விற்று வருகின்றனர்.வியாபாரிகள் கூறியதாவது:
உடுமலை பகுதிகளில், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக இருந்தது. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டதோடு, தீவன உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவை அதிகம் இருந்ததால், விலையும் கிடைத்து வந்தது.
படைப்புழு தாக்குதல் காரணமாக, சிக்கல் ஏற்பட்டது. தற்போது, கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, எத்தனால் உற்பத்தி ஆலைகளுக்கும் பிரதான மூலப்பொருளாக பயன்படுவதால், மக்காச்சோளம் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், விலையும் உயர்ந்து வருகிறது. கடந்தாண்டை விட, நடப்பு ஆண்டு, குவிண்டாலுக்கு, 150 ரூபாய் வரை கூடுதலாக கிடைத்து வருகிறது. இதனால், தொடர்ந்து சாகுபடி பரப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.

