/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்னாற்றல் திட்டத்தை உயிரூட்ட எதிர்பார்ப்பு
/
மின்னாற்றல் திட்டத்தை உயிரூட்ட எதிர்பார்ப்பு
ADDED : மே 26, 2024 11:14 PM
பொள்ளாச்சி:கிராம ஊராட்சிகளில், மின்னாற்றல் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (கிராம் உர்ஜா சுவராஜ்) திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளில் மரபு சாரா எரிசக்தி வளங்களை பயன்படுத்தி, மின்னாற்றலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கிராம ஊராட்சிகள் முழுக்க உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களில் சோலார் பேனல் பொருத்தி, சூரிய ஒளி வாயிலாக மின்சாரம் பெறுவது; சோலார் மின்னாற்றல் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வீடுகளின் தேவைக்கு போக எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்று, வருமானம் ஈட்டுவதை இலக்காக கொண்டு இத்திட்டம் துவக்கப்பட்டது.
அவ்வகையில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களிலும், இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மக்களிடையே விழிப்புணர்வு இன்மையால் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாமல் உள்ளது.
மக்கள் கூறியதாவது:
இத்திட்டத்தில், ஒரு வீட்டுக்கு தேவையான சோலார் மின்னாற்றல் கட்டமைப்பு ஏற்படுத்த, வீடுகளின் உரிமையாளர்கள், 90 ஆயிரம் ரூபாய் வரை பங்களிப்பாக செலுத்த வேண்டும்; அரசின் சார்பில், 30 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
இந்த கட்டமைப்பு வாயிலாக, 2 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனால், தனிநபர் வீடுகளில் சோலார் பேனல் பொருத்த ஊக்குவிக்கப்படவில்லை.
அதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. திட்டத்தை செயல்படுத்த எவரும் முன்வருவதில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

