/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒவ்வொருவரும் 50 பேரையாவது ஓட்டுப்போட ஊக்குவிக்க வேண்டும் ;சூலுாரில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தல்
/
ஒவ்வொருவரும் 50 பேரையாவது ஓட்டுப்போட ஊக்குவிக்க வேண்டும் ;சூலுாரில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தல்
ஒவ்வொருவரும் 50 பேரையாவது ஓட்டுப்போட ஊக்குவிக்க வேண்டும் ;சூலுாரில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தல்
ஒவ்வொருவரும் 50 பேரையாவது ஓட்டுப்போட ஊக்குவிக்க வேண்டும் ;சூலுாரில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தல்
ADDED : ஏப் 07, 2024 01:09 AM

சூலூர்;'அனைவரும் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும்; அத்துடன், குறைந்தது 50 பேரையாவது ஓட்டுப்போட ஊக்குவிக்க வேண்டும்' என, சூலூரில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் வரும், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் எம்.ராமச்சந்திரன் சார்பில், 'வலுவான, வளமான பாரதத்திற்கு, 100 சதவீத ஓட்டுப்பதிவு' என்ற சிறப்பு கருத்தரங்கம், கோவை மாவட்டம், சூலூரில் நேற்று நடந்தது.
இதில், மூத்த பத்திரிகையாளர் 'துக்ளக்' ரமேஷ் பேசியதாவது:
அனைவரும் வரும் 19ம் தேதி தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். 'நான் ஓட்டு போட்டால் என்ன மாற்றம் வந்து விட போகிறது; ஓட்டு போடாவிட்டால் என்ன ஆகி விட போகிறது' என, அலட்சியமாக இருந்ததால், பல ஆண்டுகளாக அவலமான ஆட்சியை பார்த்து வருகிறோம்.
படித்தவர்கள் அனைவரும், தங்கள் உறவினர், நண்பர்கள் என, 50 பேரையாவது ஓட்டளிக்க ஊக்கப்படுத்த வேண்டும். அதன் மூலம் ஊருக்கும், தேசத்துக்கும் நன்மை உண்டாகும். தொடர்ந்து, ஓட்டு போட்டவர்களுக்கே ஓட்டளித்து, சலித்து போக வேண்டுமா? ஒரு மாற்றத்துக்கான முதல் விதை, கோவையில் இருந்து வர வேண்டும்.
அனைத்து இடங்களிலும், மதுக்கடைகளை திறந்து விட்டு, 1000 ரூபாய் கொடுத்தால் என்ன பயன் கிடைக்கும் என, மக்கள் சிந்திக்க வேண்டும்.
நமது ஓட்டு மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும், பலமான மத்திய அரசு அமையவும், உறுதுணையாக இருக்க வேண்டும்.
சீனிவாசன், பத்திரிகையாளர்
100 சதவீதம் ஓட்டு என்பது, நம் இலக்காக இருக்க வேண்டும். நல்லவர்களின் மவுனம் தான் சமுதாயத்துக்கோ, நாட்டுக்கோ கேடாய் அமைகிறது.
2014- - 2024 ஆட்சியையும், அதற்கு முந்தைய ஆட்சியையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன், தினம் ஒரு ஊழல் நடந்தது. தற்போது ஊழல் என்பதே இல்லை. நாட்டின் பாதுகாப்பு வலிமையாக உள்ளது. எந்தவொரு தீவிரவாத அச்சுறுத்தலும் கிடையாது.
கழிவறைகள், வீடுதோறும் குடிநீர், மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு மின் வசதி, ரோடு வசதிகள், ரயில், விமான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.
உலகிலேயே பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்ட நாடுகளில், ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதற்கு காரணம் ஸ்திரமான ஆட்சியாகும்.
ஒரு தைரியமான, உறுதியான முடிவு எடுக்க கூடிய தலைவர், பிரதமராக வரவேண்டும் என்பதை சிந்தித்து, தேசிய சிந்தனையோடு ஓட்டளிக்க வேண்டும். அப்போது தான் நாடு பாதுகாப்பாகவும், சுபிட்சமாகவும் இருக்கும்.
மணிகண்டன், பட்டிமன்ற பேச்சாளர்
2019ல் நடந்த தேர்தலில், கோவை தொகுதியில், 19.58 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். அதில், 12.45 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளித்தனர். 7.28 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை. வென்ற வேட்பாளர், 5.71 லட்சம் ஓட்டுகள் பெற்றார். ஓட்டு போடாதவர்கள், அந்த தேர்தலில் ஓட்டளித்து இருந்தால், முடிவு மாறியிருக்கும்.
பிரபாகரன், அரசியல் விமர்சகர்
ஒரு ரூபாய் ஜி.எஸ்.டி., தமிழக அரசு மத்திய அரசுக்கு செலுத்தினால், 97 பைசாவை மத்திய அரசு திருப்பி அளிக்கிறது என்பதே உண்மை.
நேரடி வரி விதிப்பில், ரூ.6.23 லட்சம் கோடியை தமிழக அரசு செலுத்தினால், ரூ.6.96 லட்சம் கோடியாக திருப்பி மத்திய அரசு அளிக்கிறது.
ஒரு ரூபாய் கொடுத்தால், 1.17 பைசாவாக மத்திய அரசு திருப்பி அளிக்கிறது. இதையெல்லாம் மறைத்து பிரசாரம் செய்யப்படுகிறது. அதனால், சிந்தித்து ஓட்டளியுங்கள்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
கொங்கு தமிழ் சங்கமம், 'தமிழ்நாடு டயலாக்ஸ்' அமைப்பினர், பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

