/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்ல திட்டங்களை தடுத்து விட்டு எங்கள் மீது பழிபோடாதீர்கள்! தி.மு.க., அரசுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
/
நல்ல திட்டங்களை தடுத்து விட்டு எங்கள் மீது பழிபோடாதீர்கள்! தி.மு.க., அரசுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
நல்ல திட்டங்களை தடுத்து விட்டு எங்கள் மீது பழிபோடாதீர்கள்! தி.மு.க., அரசுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
நல்ல திட்டங்களை தடுத்து விட்டு எங்கள் மீது பழிபோடாதீர்கள்! தி.மு.க., அரசுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
ADDED : செப் 13, 2024 02:09 AM

கோவை:''திராவிட அரசியல் என்ற பெயரில் மத்திய அரசின் நல்ல திட்டங்களைத் தடுக்கின்றனர். உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி, மத்திய அரசு மீது பழிபோடுகின்றனர்'' என, தமிழக அரசு பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கோவை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
ேஹாட்டல் அதிபர் ஒருவர் உங்களிடம் கேட்ட கேள்வி வைரல் ஆகியிருக்கிறதே?
புதன்கிழமை நடந்த கூட்டத்தில், ேஹாட்டல் அதிபர் ஒருவர் மிக ஜனரஞ்சகமான வார்த்தைகளை பயன்படுத்தி, இனிப்புக்கு ஒரு வரி, காரத்துக்கு ஒரு வரி, கிரீம் போட்டால் ஒரு வரி எனப் பேசினார். நீண்ட நாட்களாக அத்தொழிலில் இருக்கிறார். பெரியவர். அவர் ஸ்டைலில் பேசினார்; அதில் தவறில்லை.
ஆனால், இதைக் கேட்பவர்களுக்கு, ஜி.எஸ்.டி.,க்கு எதிரானவர்களுக்கு இது, 'ஆஹா' என இருந்திருக்கும்.
வெளிப்படையாக பார்ப்பவர்களுக்கு, 'ஊறுகாய் மாமி'யைக் கேள்வி கேட்டு விட்டார். மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என இருக்கும். ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை.
ஆனால், அமைச்சர்கள் குழு, ஏறக்குறைய ஓராண்டு காலம், ஒவ்வொரு பொருளாக, தனித்தனியாக, மிக விரிவாக ஆய்வு செய்து, எவ்வளவு வரி விதிக்கலாம் என பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தான் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
அந்தக் குழுவில் பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங்களில் இருந்தும் அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். ேஹாட்டல் துறையில் சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர். அதையும் குழு பரிசீலிக்கும்.
ஜி.எஸ்.டி.,யால் மக்களுக்கு சுமை இல்லாமல் இருக்க எவ்வளவு முயற்சி செய்ய முடியுமோ, அவ்வளவு முயற்சியை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., வரி வீதம் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுமா?
ஜி.எஸ்.டி., கவுன்சில் ஆராய்ந்து முடிவு செய்யும். தமிழக நிதியமைச்சர் உட்பட அனைத்து மாநிலத்தின் நிதியமைச்சர்களும் ஜி.எஸ்.டி., கவுன்சிலில் உறுப்பினர்தான். கடந்த 7 ஆண்டுகளில் எந்தவொரு முடிவும், எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து முடிவுகளும் முழு ஒப்புதலுடன்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பரிந்துரைகளை ஏற்று இதுவரை மாற்றம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா?
நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவக் காப்பீடு மீதான ஜி.எஸ்.டி.,யை நீக்க, குறைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கேட்டன. ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முன்பிருந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவக்காப்பீடு மீது வரிவிதிக்கப்பட்டிருந்தது. அது தொடர்ந்து ஜி.எஸ்.டி.,க்கு மாறிவிட்டது; வரியும் சற்று குறைந்திருக்கிறது.
பி.எம்.கிசான் திட்டத்தில் ஏராளமான தமிழக விவசாயிகள் விடுபட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளதே?
பயனாளிகள் பட்டியலை மாநில அரசு தான் தர வேண்டும். அவ்வாறு விடுபட்டிருந்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க, வேளாண் துறை அமைச்சரிடம் பேசுகிறேன். கிசான் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவது குறித்தும் துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வரும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து?
ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசல் ஏற்கனவே உள்ளது. ஜி.எஸ்.டி., அமல் செய்யும்போதே, பெட்ரோல், டீசலுக்கு, 'எனாபிளிங் புரவிஷன்' கொண்டு வரப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டு, எவ்வளவு வரி விதிப்பு என்பதை முடிவு செய்தால், உடனடியாக, அமல் செய்யப்படும். எனக்குத் தெரிந்தவரையில், எந்த மாநிலமும் முன்வருவதாகத் தெரியவில்லை.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து?
மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான முதல்வரின் அனைத்து முயற்சிகளையும் வரவேற்கிறேன். அவர் மேற்கொள்ளட்டுமே. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது, உறுதி கொடுப்பது இவை நடக்கும். எல்லா மாநிலங்களும் இதைத்தான் செய்யும். எந்த அளவுக்கு நிறைவேறுகிறது என்பதைப் பிறகு பார்க்கலாம்.
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படுவதாக புகார்கள் உள்ளனவே?
இது தவறான தகவல். ஏழைகள் பயன்படுத்தும் ஜன்தன் கணக்கு, நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கு இது எதற்கும், குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது. அவ்வாறு இருப்பின் புகார் தெரிவிக்கலாம். ஏழைகளிடம் இருந்து இவ்வாறு பணம் வசூலிக்கும் திட்டம் ஒருபோதும் இருந்ததில்லை.
விஸ்வகர்மா திட்டம் தமிழகம், மே.வங்கத்தில் அமல்படுத்தவில்லையே?
மற்ற எல்லா மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. விஸ்வகர்மா என்பது குலத்தொழில் அல்ல. யாராக இருந்தாலும், கருவிகளை வைத்து தொழில் செய்தால் அவர் விஸ்வகர்மாதான். முடிதிருத்துபவர் முதல் மேஸ்திரி வரை 18 தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதை ஜாதியுடன் தொடர்புபடுத்தக்கூடாது.
மத்திய அரசின் வாயிலாக நல்ல திட்டங்கள் வந்துவிடுகிறதே என ஒவ்வொன்றுக்கும் தடை ஏற்படுத்துகின்றனர்.
திராவிட அரசியல் என்ற பெயரில், குலத்தொழிலுக்கு எதிரானவர்கள், ஹிந்திக்கு எதிரானவர்கள், ஜாதிக்கு எதிரானவர்கள் நாங்கள் என்கின்றனர். உண்மையில் நடப்பது என்ன?
பள்ளியில் குழந்தைகளை வெட்டிக் கொல்கின்றனர். சாலையில் ஜாதி மோதல் நடக்கிறது. குடிநீரில் மலம் கலக்கின்றனர்; சமத்துவம் பேசுபவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஹிந்தி பேசித் தான் ஆக வேண்டும் என நான் சொல்லவில்லை. நான் இன்றும் புறநானுாறு, திருக்குறள் படிக்கிறேன்.
ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, நல்ல திட்டம், ஏழைகளுக்கு உதவும் திட்டம் வந்தால் ஜாதி, ஹிந்தி, ஆரிய ஆதிக்கம் என அதைத் தடுக்கின்றனர்.
கேந்திரிய வித்யாலயா சேர்க்கைக்கு என்னிடம் எத்தனை எம்.பி.,க்கள் அனுமதி கேட்டு வந்துள்ளனர். ஆனால், வெளியில் மக்களை ஏமாற்ற பாசாங்கு செய்கின்றனர்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

