/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் ஓட்டு சதவீதம் குறைக்க தி.மு.க., முயற்சி: பா.ஜ., விவசாய அணி தலைவர் குற்றச்சாட்டு
/
கோவையில் ஓட்டு சதவீதம் குறைக்க தி.மு.க., முயற்சி: பா.ஜ., விவசாய அணி தலைவர் குற்றச்சாட்டு
கோவையில் ஓட்டு சதவீதம் குறைக்க தி.மு.க., முயற்சி: பா.ஜ., விவசாய அணி தலைவர் குற்றச்சாட்டு
கோவையில் ஓட்டு சதவீதம் குறைக்க தி.மு.க., முயற்சி: பா.ஜ., விவசாய அணி தலைவர் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 20, 2024 01:14 AM
கோவை:''கோவையில் ஓட்டு சதவீதத்தை குறைக்க, விஞ்ஞான முறையில் திட்டமிட்டு, தி.மு.க., பல்வேறு பணிகளை செய்திருக்கிறது,'' என, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக, கோவை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க., திட்டமிட்டு, கோவையில், 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் ஓட்டுப்போட்ட வாக்காளர்களின் பெயர்களை, பல இடங்களில் நீக்க வைத்திருக்கின்றனர்.
சூலுார் தொகுதியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில், மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஆய்வு செய்தபோது, ஒரு தம்பதியினர், '20 ஆண்டுகளாக ஓட்டுப்போடுகிறோம். இம்முறை எனது போட்டோவுக்கு பதில் வேறொரு பெண்ணின் போட்டோவை அச்சிட்டு, 'டெலிட்' என முத்திரை குத்தி நீக்கியிருப்பதாக' புகார் தெரிவித்தனர்.
படித்தவர்கள் மற்றும் நல்ல அரசியலை விரும்பும் வாக்காளர்களின் பெயர்களை திட்டமிட்டு, பல இடங்களில் நீக்கியுள்ளனர். ஓட்டுப்பதிவை பல இடங்களில் தாமதித்து வந்தனர்.
பல இடங்களில் சாமியானா பந்தல் அமைக்கவில்லை. வெயில் காரணமாக, வாக்காளர்கள் திரும்பிச் செல்கின்றனர். ஓட்டு சதவீதம் அதிகரிக்கக் கூடாது என விரும்புகின்றனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரிசையாக, 1, 2, 3 என வைத்திருக்க வேண்டும்.
பல இடங்களில் வரிசையை மாற்றி, 3, 2, 1 என இயந்திரங்களை வைத்தனர். பா.ஜ., பூத் ஏஜன்ட்டுகள் வலியுறுத்தியும், இயந்திரங்களை வரிசையாக வைக்க மறுத்திருக்கின்றனர்.
ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ.,வினர் நிற்க அனுமதி தராமல், போலீசார் துரத்தி விட்டனர். மண்டல பொறுப்பில் உள்ள இருவரை பிடித்து, சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்து விட்டனர்.
திட்டமிட்டு விஞ்ஞான முறையில் ஓட்டு சதவீதத்தை எப்படி எல்லாம் குறைக்க முடியும் என தி.மு.க., செய்து வருகிறது. கலெக்டரிடம் போனில் விபரங்களை தெரிவித்தோம்.
ஓட்டுச்சாவடி இயந்திரங்களை வரிசையாக வைக்க, அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் பொதுவான அறிவுறுத்தல் வழங்கி விடுகிறோம் என உறுதி கூறியிருக்கிறார்.
சாமியானா போடுவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதற்கு பதில் சொல்லவில்லை.
'சேலஞ்ச்' ஓட்டு கேட்டிருக்கிறோம்; அதற்கான பதில் வரவில்லை. காவல்துறை பல இடங்களில் பா.ஜ.,வுக்கு மட்டும் எதிர்ப்பு காட்டுகிறது. தி.மு.க.,வினருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் எதுவும் சொல்வதில்லை; பா.ஜ.,வினர் மட்டும் நிற்கக் கூடாது என, தொந்தரவு செய்கின்றனர்.
படித்தவர்கள் ஓட்டு, நல்ல அரசியல் விரும்புபவர்களின் ஓட்டை எப்படி குறைப்பது; அவர்களை எப்படித் திருப்பி அனுப்புவது என்பதை, தி.மு.க., தெளிவாக செய்கிறது.
இவ்வாறு, நாகராஜ் கூறினார்.

