/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதியில்லாததால் அதிருப்தி
/
ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதியில்லாததால் அதிருப்தி
ADDED : ஏப் 15, 2024 08:59 PM
பொள்ளாச்சி:பெரும்பாலான ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதியில்லாத காரணத்தால், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள ரேஷன்கடைகள், எம்.எல்.ஏ.. நிதி மற்றும் சிறப்பு நிதிகள் வாயிலாக கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, இருப்பு அறை, சாக்கு இருப்பு வைக்கும் அறை, பொருட்கள் வினியோகிக்கும் அறைகளுடன் ரேஷன் கடைகள் காணப்படுகின்றன.
முழு நேர மற்றும் பகுதிநேர கடையாக இருந்தாலும், விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள், காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை ரேஷன் கடையில் உள்ளனர். ஆனால், அவர்கள் இயற்கை உபாதை கழிக்க, கழிப்பிட வசதி கிடையாது. இதனால், விற்பனையாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பெண் விற்பனையாளர்கள், மிகுந்த மன உளைச்சலால் பாதிக்கின்றனர்.
பணியாளர்கள் கூறியதாவது: சில பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகளில் சாக்கு இருப்பு அறை கிடையாது. பொருட்கள் வைக்கும் அறையிலேயே சாக்கு இருப்பு வைக்கப்படுகிறது. கழிப்பறை வசதியில்லாததால், விற்பனையாளர்கள், அருகில் உள்ள வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
அப்போது, கடைகளை அடைத்து விட்டு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அச்சமயத்தில் கடைக்கு வருவோர், பூட்டி இருப்பதை பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அடுத்த நாள் வந்து, நேற்று ஏன் கடை திறக்கவில்லை என, வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக ரேஷன் கடைகளுக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

