/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊருக்குள் புகும் யானையை தடுக்காத வனத்துறையை கண்டித்து சாலைமறியல்
/
ஊருக்குள் புகும் யானையை தடுக்காத வனத்துறையை கண்டித்து சாலைமறியல்
ஊருக்குள் புகும் யானையை தடுக்காத வனத்துறையை கண்டித்து சாலைமறியல்
ஊருக்குள் புகும் யானையை தடுக்காத வனத்துறையை கண்டித்து சாலைமறியல்
ADDED : ஏப் 05, 2024 11:10 PM

தொண்டாமுத்தூர் : மாதம்பட்டி, சிறுவாணி மெயின்ரோட்டில், ஊருக்குள் புகும் காட்டுயானையை தடுக்காத வனத்துறையையும், விவசாயியை மிரட்டிய வனவரை கண்டித்தும், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட குப்பனூரில், நேற்றுமுன்தினம் இரவு விளைநிலங்களில் காட்டு யானை புகுந்துள்ளது. அப்பகுதி விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் வராததால், விவசாயிகள், ஜே.சி.பி.,யை ஸ்டார்ட் செய்து சப்தம் எழுப்பி விரட்டியுள்ளனர்.
இதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். சுமார், 1 மணி நேரத்திற்கு பின், 2 வனப்பணியாளர்கள் பைக்கில் வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், மதுக்கரை வனவர் ஐயப்பன், குப்பனூரை சேர்ந்த செந்தில்குமார் என்ற விவசாயியை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, யானையை ஜே.சி.பி., வைத்து விரட்டிய வீடியோவை, வாட்ஸ்ஆப் குழுவில் பகிர்ந்தால், உங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வோம் என, மிரட்டியதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதை கண்டித்து, 70க்கு மேற்பட்ட விவசாயிகள், மாதம்பட்டி, சிறுவாணி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார், 2 மணி நேரம் நடந்த சாலை மறியலால், ஆலாந்துறை செல்லும் ரோடு, தொண்டாமுத்தூர் ரோடு, குப்பனூர் ரோடு, பேரூர் ரோடு என, நான்கு ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார், பேரூர் டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கூடுதல் வாகனங்கள் இயக்கி ரோந்து பணியை அதிகரிப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, விவசாயிகள் மறியலை கைவிட்டு சென்றனர்.

