/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தேர்வு எளிது: பெரும்பாலான மாணவர்கள் சென்டம் எதிர்பார்ப்பு
/
10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தேர்வு எளிது: பெரும்பாலான மாணவர்கள் சென்டம் எதிர்பார்ப்பு
10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தேர்வு எளிது: பெரும்பாலான மாணவர்கள் சென்டம் எதிர்பார்ப்பு
10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தேர்வு எளிது: பெரும்பாலான மாணவர்கள் சென்டம் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 08, 2024 11:48 PM

- நிருபர் குழு -
பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பொதுத் தேர்வில், இரண்டு, ஐந்து மற்றும் எட்டு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புற வினாக்களாக இருந்தன என, மாணவர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 52 மையங்களில், பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் பாடத்திற்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அவ்வகையில், 4,513 மாணவர்கள், 4,628 மாணவியர் என, 9,141 பேர் தேர்வு எழுதினர். அதேநேரம், 121 மாணவர்கள், 55 மாணவியர் என, 176 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து வருமாறு:
கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவி சஷ்டிகா: ஒரு மதிப்பெண் வினாக்களில் ஒன்று மட்டும் அகவினாவாக இருந்தது. ஏற்கனவே முறையாக பயிற்சி செய்திருந்ததால், அந்த வினாவுக்கு எளிதாக பதில் எழுதினேன். இரண்டு, ஐந்து மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புற வினாக்களாக இருந்தன. முழு மதிப்பெண் கிடைக்கும் என, நம்புகிறேன்.
மதன்பிரசாத்: தேர்வுக்கு முன்னர், தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். ஐந்து மற்றும் எட்டு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புற வினாக்களாக இருந்தது. இருப்பினும், வினாத்தாளில் இடம்பெற்றிருந்த அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளதால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர் ரிஜித்: சமூக அறிவியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு மட்டும் சற்று கடினமாக இருந்தது. ஆசிரியர் அளித்த தொடர் பயிற்சியால், அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
சன்மதி: ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்துமே எளிதாக இருந்தது. இருப்பினும், அதில் இடம்பெற்றிருந்த ஒரு வினா மட்டும் சிறிது கடினமாக இருந்தது. வரைபட பகுதிகளும், காலக்கோடு பகுதிகளும் மிக எளிதாக இருந்தது.தேர்வை சிறப்பா எழுதியுள்ளேன், முழு மதிப்பெண் கிடைக்கும்.
முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் பள்ளி மாணவி ரமியா: தேர்வில், சில ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் கட்டாய வினாக்கள், பாடத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. வரைபடம், 5 மதிப்பெண், 8 மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததால், உரிய நேரத்திற்குள் விடை எழுதினேன்.
ஜெயசக்தி: ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு சரியாக பதில் எழுதியுள்ளதால், முழு மதிப்பெண் கிடைக்கும். ஐந்து மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததால், சரிவர பதில் எழுத முடியவில்லை. காலக்கோடு மற்றும் வரைபடம் மிக எளிமையாக இருந்தது. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும் என, நம்புகிறேன்.
உடுமலை
உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கூறியதாவது:
ஆபியாபேகம்: ஒரு மதிப்பெண் வினா ஒன்று மட்டும் குழப்பமாக இருந்ததால், விடை உறுதியாக எழுத முடியவில்லை. ஐந்து மதிப்பெண் பகுதிகளில் உள்ள வினாக்கள் முந்தைய தேர்வுகளில் அதிகம் கேட்கப்பட்டவை. வரைபட பகுதிகளிலும் எதிர்பார்த்த இடங்கள் தான் கேட்கப்பட்டன. மூன்று மதிப்பெண் வினா பகுதியில், ஒரு சில வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டன. எளிமையான வினாத்தாளாக தான் இருந்தது.
சங்கீதா: தேர்வானது எதிர்பார்த்ததை விட மிக எளிமையாக இருந்ததால் மகிழ்ச்சியாக உள்ளது. இறுதித்தேர்வு இவ்வாறு வந்தது, கொண்டாட்டமாகவே உள்ளது. ஒரு மதிப்பெண் வினாவில் ஒன்று பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டது. விடை எழுதினாலும், சந்தேகமாகதான் உள்ளது. மற்ற பகுதிகளில் அதிகமான பயிற்சி செய்த வினாக்கள்தான் வந்திருந்தன.
சவுமியாஸ்ரீ: தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில், ஒன்று மட்டும் பாடத்தின் உள்ளிருந்து கேட்டிருந்தன. மற்ற அனைத்து வினாக்களும் பயிற்சி வினாக்கள்தான். ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒன்றும் பாடத்தின் உள்ளிருந்துதான் வந்திருந்தது. இருப்பினும், சாய்ஸில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்தன. சதம் எடுக்கும் அளவுக்கு தேர்வை எழுதியுள்ளேன்.
அயிஷாசித்திகா: பள்ளியில் நன்றாக பயிற்சி பெற்றதால் தேர்வு மிகவும் சுலபமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினா ஒன்று குழப்பினாலும், பொறுமையாக யோசித்து விடை எழுதிவிட்டேன். மற்ற அனைத்து பகுதிகளிலும் வினாக்கள் தெளிவாகவும், நேரடியாகவும், பயிற்சி வினாக்களாகவும் இருந்ததால் விடைகளை சுலபமாக எழுத முடிந்தது. கட்டாயம் சென்டம் கிடைக்கும்.
நந்தினி: ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் பகுதிகளில் சில வினாக்கள் பயிற்சி வினாக்களாக இல்லாமல் பாடத்தின் உள்ளிருந்தது கேட்கப்பட்டன. வரைபடப்பகுதி எளிமையாக இருந்தது. நெடுவினாவும் எளிமையாகவும் கேட்கப்பட்டதால், விடைகளை சுலபமாகவும், விரைவாகவும் எழுதிவிட்டேன்.
உடுமலை சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி: தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. பள்ளியில் நடத்தப்படும் அலகு தேர்வுகள், பயிற்சி தேர்வுகளில் வந்த வினாக்கள் அதிகம் பொதுத்தேர்விலும் இடம்பெற்றன. இதனால் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினேன். ஐந்து மதிப்பெண் பகுதியில் வினாக்கள் எதிர்பார்த்தவைதான்.

