/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏப்., 17 வரை அனல் பறக்கும்! வேட்பாளர்களின் பிரசாரம்...ஓய்வின்றி ஓட்டு சேகரிக்க கட்சியினர் தீவிரம்
/
ஏப்., 17 வரை அனல் பறக்கும்! வேட்பாளர்களின் பிரசாரம்...ஓய்வின்றி ஓட்டு சேகரிக்க கட்சியினர் தீவிரம்
ஏப்., 17 வரை அனல் பறக்கும்! வேட்பாளர்களின் பிரசாரம்...ஓய்வின்றி ஓட்டு சேகரிக்க கட்சியினர் தீவிரம்
ஏப்., 17 வரை அனல் பறக்கும்! வேட்பாளர்களின் பிரசாரம்...ஓய்வின்றி ஓட்டு சேகரிக்க கட்சியினர் தீவிரம்
ADDED : மார் 28, 2024 05:08 AM

பொள்ளாச்சி, : லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், ஏப்., 17ம் தேதி வரை, வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேள தாளங்கள் முழுங்க ஓட்டு சேகரிப்பை நேற்று துவங்கினர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் கார்த்திகேயன், தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி, பா.ஜ., வசந்தராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். நேற்று, மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், லோக்சபா தேர்தலுக்கு, ஓட்டளிக்க, இன்னும் 23 நாட்களே உள்ளது.அதிலும், ஏப்., 17ம் தேதி மாலையுடன் பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது கட்சி நிர்வாகிகளையும், கூட்டணி கட்சியினரையும் ஒன்றிணைத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, அந்தந்த சட்டசபை தொகுதி கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள், 24 மணி நேரமும் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க, ஒதுக்கப்பட்ட பகுதியை வலம் வருகின்றனர்.
இனிவரும் நாட்களில், ஆறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முக்கிய நகரங்களில் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடவும் உள்ளனர். இதற்காக, நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்களின் கட்சி வேட்பாளருக்காக, போட்டி போட்டு வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக, செண்டை மேளம், தாரை தப்பட்டை முழுங்க, பட்டாசு வெடித்து தோரணங்கள், பூமழை என அமர்க்கள வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். அவ்வகையில், கேரளா மாநிலத்தில் இருந்தும் வாத்திய குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, பிரசாரத்தில் ஈடுபடும் கட்சித் தொண்டர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், பிரியாணி, மதுப்பாட்டில்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் கூறியதாவது:
வேட்பாளர்கள், உள்ளூரில் தங்களின் செல்வாக்கை மக்களிடம் நிரூபிக்கவும், கட்சியில் நல்ல பெயர் எடுத்து, அடுத்த கட்ட பதவிக்கும் காய் நகர்த்துவர். லோக்சபா தேர்தலை பொறுத்தமட்டில், பெரும்பாலான கவுன்சிலர், தலைவர்கள், ஒப்புக்கு பிரசாரத்தில் ஈடுபடுவதோடு, அடக்கி வாசித்து விடுவர்.
இதனால், பல இடங்களில், தேர்தல் பிரசாரம் நடப்பதற்கான சுவடே தெரியாமல் இருக்கும். ஓட்டுப்பதிவுக்கு குறைந்த நாட்களே இருப்பதால், அனைத்து சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கும் நேரடியாகச் சென்று ஓட்டு சேகரிக்க முடியாது.
இதனால், ஒவ்வொரு இடங்களுக்கும் வாகன ஒலி பெருக்கி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ளப்படும். தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப் பிடியால், வேட்பாளர்களும் அள்ளி வீசாமல், கிள்ளிக் கொடுப்பதை போல் நடந்து கொள்வர்.
தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக, பணம் பட்டுவாடா செய்யப்படும். இந்த தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது. தி.மு.க.,வின் தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வெறியுடன் உள்ளனர். பா.ஜ., வேட்பாளர் வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளார். இதனால், வேட்பாளர்களின் பிரசாரம் அனல் பறக்கும். தற்போது, வெயிலும் அதிகமாக இருப்பதால், உண்மையிலும் 'அனல் பறக்கும்'. மொத்தத்தில், லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டியுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

