/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார பஸ் இயக்கமென பணிமனைகள் அடுத்தடுத்து... தனியார்மயம்! போக்குவரத்து கழகத்தை தாரைவார்க்க முன்னோட்டம்
/
மின்சார பஸ் இயக்கமென பணிமனைகள் அடுத்தடுத்து... தனியார்மயம்! போக்குவரத்து கழகத்தை தாரைவார்க்க முன்னோட்டம்
மின்சார பஸ் இயக்கமென பணிமனைகள் அடுத்தடுத்து... தனியார்மயம்! போக்குவரத்து கழகத்தை தாரைவார்க்க முன்னோட்டம்
மின்சார பஸ் இயக்கமென பணிமனைகள் அடுத்தடுத்து... தனியார்மயம்! போக்குவரத்து கழகத்தை தாரைவார்க்க முன்னோட்டம்
ADDED : டிச 17, 2025 05:04 AM

சென்னை: சென்னையில், மின்சார பேருந்துகள் இயக்கம் என்ற பெயரில், மாநகர போக்குவரத்து கழகத்தின் இரண்டு பணிமனைகள் சத்தமின்றி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அடுத்தடுத்து பிற பணிமனைகளும் தனியாரிடம் தரப்பட உள்ள நிலையில், போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் முயற்சி என, தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும், 3,488 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள, 34 பணிமனைகளில், ஒரு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மின்சார பேருந்துகளுக்காக வியாசர்பாடி, பெரும்பாக்கம் மாநகர போக்குவரத்து கழக பணிமனைகள் கையகப்படுத்தப்பட்டு, 255 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, பூந்தமல்லி, பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை, தண்டையார்பேட்டை போன்ற பணிமனைகளில் இருந்தும், 370 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த பேருந்துகளின் இயக்கம் மற்றும் பணியாளர்கள் நியமனம் அனைத்தும், தனியார்மயமாக மாற்றப்பட உள்ளது. இதனால், மாநகர போக்குவரத்து கழகத்தில், நிரந்தர ஊழியர்கள் நியமனம் குறைந்து வருகிறது.
தனியார் மயமாக்கல் இல்லை என, போக்குவரத்து துறை சார்பில் கூறப்பட்டு வரும் நிலையில், பேருந்து இயக்கம், பணியாளர்கள் நியமனம் அனைத்தையும் தனியார் நிறுவனங்களே செயல்படுத்தி வருவது, ஏமாற்றத்தை அளிக்கிறது என, போக்குவரத்து பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து கழக பணிமனைகளை சீரமைத்து, பேருந்து வாங்கி தனியாருக்கு விடுவதற்கு பதிலாக, மாநகர போக்குவரத்து கழகமே, இந்த திட்டத்தை செயல்படுத்தாதது ஏன் எனவும், அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கணக்கீடு
இதுகுறித்து, தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த, சி.ஐ.டி.யு., மாநகர போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலர் தயானந்தம், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச் செயலர் ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனியாரிடம் இருந்த போக்குவரத்து துறையை அரசுடைமை ஆக்கினார். இதனால், ஏழை, நடுத்தர குடும்பத்தினர் அரசு வேலை பெற பெரும் வாய்ப்பாக அமைந்தது.
வருவாய் இல்லாத வழித்தடங்களிலும், அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது, போக்குவரத்து துறையை படிப்படியாக தனியார்மயமாக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
மின்சார பேருந்துகளை இயக்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதை மாநகர போக்குவரத்து கழகமே இயக்க வேண்டும். தனியார் நிறுவனம் வாயிலாக, நியமிக்கப்பட்ட ஊழியர்கள், பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இந்த திட்டம் தற்போது, சென்னையில் துவங்கி உள்ளது.
அடுத்து, மதுரை, கோவை என படிப்படியாக விரிவுப்படுத்தப்பட்டு, அரசு போக்குவரத்து கழகங்களின் இயக்கத்தை குறைக்கும் நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
பேருந்து இயக்க செலவை மட்டுமே கணக்கீடு செய்து, தனியார் பேருந்துகளை அதிகரிப்பது, வரும் ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் மின்சார பேருந்துகளை, ஒப்பந்த தொழிலாளர்களே இயக்குகின்றனர். இதற்கான வரவு - செலவு கணக்குகளை அவர்களே பார்க்கின்றனர். அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் தருவதில்லை.
சம்பளம் தாமதம்
சில மாதங்கள் சம்பளம் தாமதமாக வருகிறது. சில மாதங்களில் சம்பளத்தில் கணிசமான தொகை பிடித்தம் செய்கின்றனர். அவர்களால், எங்கே சென்று புகார் அளிக்க முடியும்.
ஒரு பேருந்தின் அதிகபட்ச ஒரு நாள் வசூலே, 7,000 ரூபாயாக உள்ள நிலையில், மின்சார பேருந்துக்கு, 11,000 ரூபாய் வாடகையை தனியார் நிறுவனத்திற்கு அரசு செலுத்தி வருகிறது.
அதாவது, 1 கி.மீ.,க்கு 80.86 ரூபாய் என்றும், ஒரு நாளுக்கு 200 கி.மீ., என்றும் ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ளது.
இந்த வகையில், ஒரு நாளுக்கு 16,000 ரூபாயை போக்குவரத்து கழகம் தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் வசூல், 7,000 ரூபாய்தான்.
இந்த ஒப்பந்தம் 12 ஆண்டுக்கு போடப்பட்டுள்ளது. இதில் பேருந்தை இயக்கினாலும் இயக்காவிட்டாலும் வாடகை வழங்க வேண்டும். தாழ்தள பேருந்துகள் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 2.5 கி.மீ., மட்டுமே மைலேஜ் தருவதால் இழப்பு ஏற்படுகிறது.
தனியார் நிறுவனத்திற்கு தரும் தொகையை, மாநகர போக்குவரத்து கழகத்துக்கு அளித்தால், மின்சார பேருந்துகளை இன்னும் சிறப்பாக இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெரம்பூர் பேருந்து நிலைய இடத்தில் 'பெட்ரோல் பங்க்' பெரம்பூர் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை தனியாருக்கு, அரசு தாரை வார்த்துள்ளது. அந்த இடம் பெட்ரோல் பங்காக மாறியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள, பெரம்பூர் பேருந்து நிலையம், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் ரயில் பயணிகளுக்கும் வரப்பிரசாதமாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, பெரம்பூர் நெடுஞ்சாலையை ஒட்டிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், தனியார் நிறுவனம் பெட்ரோல் பங்க் அமைத்துள்ளது. இதனால் பேருந்துகள் வந்து செல்வது சிக்கலாகியுள்ளது. பயணியருக்கும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'எங்கள் நிறுவனம் சார்பில், 2022ம் ஆண்டே இந்த இடம் மட்டுமின்றி, சென்னையில் பல இடங்களை டெண்டர் மூலம், 15 ஆண்டுகளுக்கு மாத வாடகைக்கு பெற்றுள்ளோம். எல்லாமே சட்டப்படியே நடந்துள்ளது' என்றார்.

