/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? தி.மு.க., --- எம்.எல்.ஏ., முற்றுகை
/
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? தி.மு.க., --- எம்.எல்.ஏ., முற்றுகை
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? தி.மு.க., --- எம்.எல்.ஏ., முற்றுகை
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? தி.மு.க., --- எம்.எல்.ஏ., முற்றுகை
ADDED : மார் 12, 2024 12:42 AM

செங்குன்றம், அடிப்படை வசதி கோரி மாதவரம் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுதர்சனத்தை, மோரை பகுதியினர் முற்றுகையிட்டனர்.
ஆவடி அடுத்த, மோரை ஊராட்சி, புதிய கன்னியம்மன் நகரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டம் முடிந்து, எம்.எல்.ஏ., சுதர்சனம் புறப்படும்போது, அப்பகுதி மக்கள் அவரை வழிமறித்து முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு மனை பட்டா கோரி வருகிறோம். இலவச வீட்டு மனை பட்டா கிடைக்கும் என, தேர்தலின் போது நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், இதுவரை பட்டா கிடைக்கவில்லை.
ஊராட்சி நிர்வாகத்தின் மூலம், சில தெருக்களில் மட்டும் புதிய சாலை போடப்படுகிறது.
பல தெருக்களில் இதுவரை சாலை, கழிவுநீர் கால்வாய் வசதிகள் ஏற்படுத்தவில்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிரமப்படுகிறோம்.
எம்.எல்.ஏ.,விடம் இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு, 'உங்கள் பிரச்னை குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின், அனைத்து வசதிகளும் விரைவாக கிடைக்கும்' என உறுதியளித்து, அங்கிருந்து எம்.எல்.ஏ., புறப்பட்டார்.
மாதவரம் தொகுதி, மோரை ஊராட்சியில், புதிய கன்னியம்மன் நகர், 2009ம் ஆண்டு உருவானது. அங்கு, 3,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
மாதவரம் தொகுதியில் 2011 தேர்தலில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மாதவரம் மூர்த்தி எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார்.
புதிய கன்னியம்மன் நகர் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த இரண்டு தேர்தல்களில், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வைச் சேர்ந்த சுதர்சனம் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது, இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக, புதிய கன்னியம்மன் நகர் பகுதியினருக்கு தொடர்ந்து வாக்குறுதி அளித்தார்.
ஆனால், புதிய கன்னியம்மன் நகருக்கான இடம், வீட்டு மனையாக நில வகைப்பாடு செய்யவில்லை என்பதால், வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
இப்பிரச்னையில் அதிருப்தி அடைந்துள்ள புதிய கன்னியம்மன் நகர் பகுதியினர், தங்களின் எதிர்ப்பை தேர்தலின் போது காட்ட முடிவு செய்துள்ளனர்.

