/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலை உணவை தரமாக தருகிறோம்: மாநகராட்சி கமிஷனர் விளக்கம்
/
காலை உணவை தரமாக தருகிறோம்: மாநகராட்சி கமிஷனர் விளக்கம்
காலை உணவை தரமாக தருகிறோம்: மாநகராட்சி கமிஷனர் விளக்கம்
காலை உணவை தரமாக தருகிறோம்: மாநகராட்சி கமிஷனர் விளக்கம்
ADDED : டிச 30, 2025 05:52 AM

சென்னை: 'துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவை சுவையாகவும், சுகாதாரமாகவும் வழங்கி வருகிறோம்' என, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கான காலை நேர உணவு வர தாதமாவதால், மதிய உணவாக சேர்த்து வழங்கப்படுவது குறித்தும், உணவு தரமாக இல்லை என்பதால், உணவிற்கு பதிலாக பணமாக தரலாம் என, துாய்மை பணியாளர்கள் கூறியது குறித்தும், நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் குருமகுருபரன் அளித்துள்ள விளக்கம்:
துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, நவ., 15ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அன்று முதல், காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களிலும், துாய்மை பணியாளர்களின் சுழற்சி நேரத்திற்கேற்ப, சுவையாகவும், சுகாதாரமாகவும் கூடுதல் அளவிலும் உணவு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும், ஒரு சமையலறை வசதி ஏற்படுத்தி உணவு தயாரித்து, 'கேம்ப்ரோ பாக்ஸ்' வாயிலாக, 232 உணவு வினியோக மையங்களுக்கு சூடாகவும், பாதுகாப்பாகவும் எடுத்துச்செல்லப்படுகிறது.
காலை உணவு காலை 6:00 மணிக்குள், 2,798 துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மதியம் 2:00 மணிக்குள், 15,211 பேருக்கும், இரவு, 1,790 பேருக்கும் உணவு வழங்கப்படுகிறது.
மேலும், 232 உணவு வினியோக மையங்களிலும் குடிநீர் வசதி, மேசை, நாற்காலி, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அங்கு துாய்மை பணியாளர்கள் அமர்ந்து, உணவு அருந்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 19,799 துாய்மை பணியாளர்களுக்கு இரண்டு டிபன் கேரியர்கள் மற்றும் இரண்டு உணவு எடுத்து செல்லும் பைகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இரவு 10:00 மணிக்கு பணிக்கு வரும் துாய்மை பணியாளர்கள், காலை 6:00 மணிக்கு வேலை முடிந்தப்பின் காலை உணவை பெறுவதற்கு பதிலாக, வேலைக்கு வரும் நேரத்திலேயே இரவு உணவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனால், சில இடங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரவு உணவு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு துாய்மை பணியாளர்களுக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் முழுமையான, திருப்தியான உணவு வழங்கப்படுவதால், அவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
துாய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், அதன் தரம், சுவை மற்றும் அளவு ஆகியவற்றை கண்காணிக்கவும், தனி கண்காணிப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

