/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முடிச்சூர் ஏரிக்கரையை குப்பை கிடங்காக்கி அட்டூழியம்; நீதிமன்ற உத்தரவை மதிக்காத தாம்பரம் மாநகராட்சி
/
முடிச்சூர் ஏரிக்கரையை குப்பை கிடங்காக்கி அட்டூழியம்; நீதிமன்ற உத்தரவை மதிக்காத தாம்பரம் மாநகராட்சி
முடிச்சூர் ஏரிக்கரையை குப்பை கிடங்காக்கி அட்டூழியம்; நீதிமன்ற உத்தரவை மதிக்காத தாம்பரம் மாநகராட்சி
முடிச்சூர் ஏரிக்கரையை குப்பை கிடங்காக்கி அட்டூழியம்; நீதிமன்ற உத்தரவை மதிக்காத தாம்பரம் மாநகராட்சி
UPDATED : டிச 23, 2025 06:38 AM
ADDED : டிச 23, 2025 05:18 AM

செங்கல்பட்டு: நீதிமன்ற உத்தரவுகளை பற்றி கவலைப்படாமல், தாம்பரம் மாநகராட்சியும், முடிச்சூர் ஊராட்சியும் போட்டி போட்டு, முக்கிய நீர்நிலையான முடிச்சூர் ஏரிக்கரையை சுற்றி குப்பை கொட்டி, அட்டூழியம் செய்து வருகின்றன. போகிற போக்கில் ஏரியையே துார்த்து, குப்பை கிடங்காக மாற்றிவிடுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. உள்ளாட்சிகளின் செயலால் ஏரி மாசடைந்து வருவதோடு, மக்களும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன இங்கு, முதல் வார்டுக்கு உட்பட்ட, 'ஹில் வியூ' குடியிருப்பின் பின்புறம் துவங்கி, முடிச்சூர் ஊராட்சியின் எட்டாவது வார்டு வரை, 112 ஏக்கர் பரப்புள்ள முடிச்சூர் ஏரி உள்ளது.
வண்டலுார், மண்ணிவாக்கம், முடிச்சூர், பெருங்களத்துார் பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரி, வண்டலுார் ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.
சுகாதார சீர்கேடு
கடந்த 1960க்கு முன், 180 ஏக்கர் பரப்பில் இருந்த முடிச்சூர் ஏரி, நகரமயமாக்கலால் ஆக்கிரமிப்பில் சிக்கி, 112 ஏக்கராக சுருங்கிவிட்டது. ஏரியின் கிழக்கு கரையோரம், 25 ஏக்கர் பரப்பில் இருந்த மேய்க்கால் புறம்போக்கு நிலமும், ஆக்கிரமிப்பால், 10 ஏக்கராக குறுகி உள்ளது.
இந்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குப்பை கொட்டப்பட்டு, பெருங்குடி குப்பை கிடங்கு போல் மாறிவிட்டது. இந்த குப்பை கிடங்கால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டில் வண்டலுார், மண்ணிவாக்கம், முடிச்சூர் மற்றும் பெருங்களத்துார் பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி, பெரும் நோய் தொற்றுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, வண்டலுார் பகுதி மக்கள் கூறியதாவது: முடிச்சூர் ஏரியின் உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு வாயிலாக நீர் உறிஞ்சப்பட்டு, 100க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.
உயிரிழந்த நாய், பன்றி, பூனை, எலி உள்ளிட்டவற்றை குப்பையில் வீசுவதால், இப்பகுதி மக்களுக்கு பலவித நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த 2015ல், ஏரியின் கிழக்கு பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் பெருங்களத்துார் மற்றும் முடிச்சூர் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பையை, ஊராட்சி நிர்வாகம் கொட்டி வந்தது. மக்கள் எதிர்ப்பையும் மீறி, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தின் உட்பகுதி முழுதும் குப்பை மேடாகிவிட்டது.
இதுகுறித்து, 2020ம் ஆண்டில், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான நிலையில், அதை ஆதாரமாக வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தது. கடந்த 2022 மார்ச் 25ல், 'முடிச்சூர் ஏரி பாதுகாக்கப்பட வேண்டும். ஏரிக்கரையோரம் குப்பை கொட்டுவதை அதிகாரிகள் தடை செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.
விஷம் கலந்த நீர்
இந்நிலையில், 2021ல் தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்ட பின், 2022ல் இருந்து, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, மீண்டும் முடிச்சூர் ஏரி கரையோரம் கொட்டப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது, ஏரிக்கரையோரம் பல நுாறு டன் குப்பை மலை போல் குவிந்துள்ளது.
இந்த குப்பையால் கொசுத் தொல்லை மட்டுமின்றி துர்நாற்றம் வீசி, அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். தவிர, உயிரிழந்த நாய், பன்றி, பூனை, எலி உள்ளிட்டவற்றை, குப்பையில் சேர்த்து வீசுவதால், இப்பகுதி மக்களுக்கு பலவித நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் மழைநீரில் குப்பை நனைந்து, அதிலிருந்து வெளியேறும் விஷம் கலந்த நீர் ஏரியில் கலந்து, நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன.
பிளாஸ்டிக் கழிவுகளால், ஏரி நீர் பாழாகி துர்நாற்றம் வீசுகிறது. வண்டலுார் ஊராட்சியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் அடிக்கடி துர்நாற்றம் வீச, இதுவே காரணம். நீதிமன்ற உத்தரவையும், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி, இயற்கை வளத்தை பாதுகாக்க தவறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு கலெக்டர் சினேகா ஆய்வு செய்து, இந்த குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

