/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.18 கோடியில் கட்டிய கிளாம்பாக்கம் புது காவல் நிலையம் திறந்து ஒரு மாதமாகியும் செயல்பாட்டிற்கு வராமல் முடக்கம்
/
ரூ.18 கோடியில் கட்டிய கிளாம்பாக்கம் புது காவல் நிலையம் திறந்து ஒரு மாதமாகியும் செயல்பாட்டிற்கு வராமல் முடக்கம்
ரூ.18 கோடியில் கட்டிய கிளாம்பாக்கம் புது காவல் நிலையம் திறந்து ஒரு மாதமாகியும் செயல்பாட்டிற்கு வராமல் முடக்கம்
ரூ.18 கோடியில் கட்டிய கிளாம்பாக்கம் புது காவல் நிலையம் திறந்து ஒரு மாதமாகியும் செயல்பாட்டிற்கு வராமல் முடக்கம்
ADDED : செப் 11, 2025 04:34 AM

கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், 18.26 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, கடந்த மாதம் முதல்வரால் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் காவல் நிலைய புதிய கட்டடம், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது.
வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் செயல்பாட்டிற்கு வந்தபின், பேருந்து முனையம் உள்ளே, 2024 ஜனவரியில், புதிய காவல் நிலையம் துவக்கப்பட்டது.
போதிய வசதிகள் இல்லாதது குறித்து, காவல் துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, 33,045 சதுர அடியில், 18.26 கோடி ரூபாயில், மூன்று தளங்களுடன் அதிநவீன காவல் நிலையம் கட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிந்து, கிளாம்பாக்கம் புதிய காவல் நிலையத்திற்கான புதிய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆக., 5ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்து வைத்தார்.
ஆனால், புதிய காவல் நிலைய கட்டடம் திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும், தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை.
இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கிளாம்பாக்கம் காவல் நிலைய கட்டடத்தில், சட்டம் - ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து, அனைத்து மகளிர், போக்குவரத்து புலனாய்வு என, ஐந்து வகையான காவல் பிரிவுகள், உதவி கமிஷனர் அலுவலகம் ஆகிய அனைத்தும் ஒரே கட்டடத்தில் இயங்கும் என, அறிவிக்கப்பட்டது.
இதனால் மக்களின் அலைச்சல் குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காவல் நிலையம் திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும், இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே, புதிய காவல் நிலைய கட்டடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கடந்த மாதம் புதிய கட்டடம் திறக்கப்பட்ட பின், ஆய்விற்கு வந்த உயரதிகாரிகள், கூடுதலான இட வசதி இருப்பதை அறிந்தனர்.
எனவே, தாம்பரம் மாநகர காவல் இணை கமிஷனர் அலுவலகம், நுண்ணறிவு பிரிவு அலுவலகம் ஆகியவற்றையும் இங்கு மாற்ற முடிவு செய்தனர்.
தவிர, பேருந்து முனையம் உள்ளே பொருத்தப்பட்டுள்ள, 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளையும், இங்கிருந்தே கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த அனைத்து பிரிவுகளும் இணைந்து செயல்பட உள்ளதால், ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள் முடிந்து, புதிய கட்டடத்தில், ஒவ்வொரு காவல் பிரிவாக விரைவில் இயங்க துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.